ஊழலற்ற ஆட்சியை தமிழகத்தில் அமைப்பேன் என்றும் அதற்காக வழங்கப்பட்டிருப்பதுதான் டாக்டர் பட்டம் என்றும் கூறினார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.
இந்திய அப்போஸ்தல திருச்சபை சார்பில் கிறிஸ்துமஸ் இசைப் பெருவிழா மற்றும் விஜயகாந்துக்கு மனிதநேய சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் வழங்கும் விழா சென்னையில் நடந்தது.
அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள சர்வதேச தேவாலய மேலாண்மை நிறுவன தலைவர் ஜான் வில்லியம் மனிதநேய சமூக சேவைக்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், வி.ஜி.சந்தோஷம் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார்.
விழாவில் விஜயகாந்த் பேசுகையில், "கட்சி தொண்டர்களுக்கு இந்த டாக்டர் பட்டத்தை சமர்ப்பிக்கிறேன். சிறுபான்மையினர் என்று கூறி உங்களை நீங்களே சிறுமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் எல்லாம் பெரும்பான்மை என்பதை இன்னும் 7 மாதத்தில் நிரூபிப்பேன்.
இலவசம் என்று கொடுத்து மக்களை கெடுத்து வருகிறார்கள் என்று நான் கூறினால், விஜயகாந்த் கம்ப்யூட்டர் இலவசமாக கொடுக்கவில்லையா என்கிறார்கள். அது மாணவர்களின் அறிவுத்திறனை வளர்ப்பதற்கு. மக்களை வாழ வையுங்கள், சந்தோஷப்படுத்துங்கள். இந்த நாட்டில் ஏழைகள் இருக்கக் கூடாது.
தமிழ்நாட்டை சீரமைக்கத்தான் எனக்கு இந்த பட்டம் தரப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன். நிச்சயம் ஊழலற்ற ஆட்சியை என்னால் அமைக்க முடியும்...", என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’