வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 8 டிசம்பர், 2010

விக்கிலீக்ஸினூடாக உண்மை வெளியானது குறித்து மகிழ்ச்சி - எம்.கே.சிவாஜிலிங்கம்

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், தமிழ் அரசியல் தலைவர்கள் குறித்து கொண்டிருக்கும் அபிப்பிராயங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் மூலம் வெளியில் தெரியவந்ததையிட்டு மனத்திருப்பியடைவதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் போதும் நாடாளுமன்றத் தேர்தலின் போதும் தன் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுக்கள் உடைத்தெறியப்பட்டதன் மூலம் காலம் கடந்தாலும் உண்மைகள் வெளிவந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

'ஜனாதிபதி மீதான நடவடிக்கையை விரும்பாத அரசியல் தலைவர்கள் - விக்கிலீக்ஸ் தகவல்' என்ற தலைப்பில் இலங்கை ஜனாதிபதி மீது போர்க் குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா மேற்கொண்டால் அது தமது இருப்பை பாதிக்கும் என இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அமெரிக்காவை தடுத்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ் அரசியல் தலைவர்களின் இந்த தகவல்களை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்றனீஸ் வொஷிங்டனுக்கு அனுப்பியுள்ளார். அத்துடன் இலங்கை அரசு மீது அமெரிக்கா தனது நடவடிக்கைகளை அதிகரிக்க முயன்றபோது யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அதனைத் தடுத்து விட்டனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது மேற்கொள்ளப்படும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் தங்களது பதவிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்ததாகவும் இலங்கை அரசு மீதான நடவடிக்கைக்கு இது தருணம் அல்ல என அவர்கள் தம்மைத் தடுத்ததாகவும் பற்றீசியா அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவரவர் விளக்கங்களை அவரவர்களே வழங்க வேண்டும். எனவே இது குறித்து எனது விளக்கத்தை அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். அமெரிக்கத் தூதுவரால் அனுப்பப்பட்டிருந்த செய்தியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.யாக இருந்த சிவாஜிலிங்கம் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்வாதியென சித்தரிக்கப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுபிள்ளை பிரபாகரனின் உறவினரான இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று அதேநேரம் அரசு ஆதரவுக் கட்சிகளையும் ஆதரிக்காமல் பிரிந்து நின்றார்.
எதிர்க்கட்சிகளோ அல்லது அரசாங்கமோ தமிழர் விவகாரங்களை சரியான முறையில் கையாளவில்லை என்று சுய பிரகடனத்துடன் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட சிவாஜிலிங்கம் நம்பியிருந்தார்.
மத்தியில் அதிகாரம் குவிக்கப்படாத வகையில் எற்படுத்தப்படும் சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் சிங்களவர்கள் தமிழர்கள் ஆகியோருக்கு எனத் தனித் தனி பிரதமர்கள் வேண்டும் என்பது தான் பிரச்சினைக்கான தீர்வாக இவரால் கொள்ளப்பட்டு இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இவர் இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டு குறித்து சர்வதேச மட்டத்தில் முழுமையான நீதி விசாரணை வெளிப்படையாக வேண்டும் எனவும் யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்றும் யுத்தக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வெளிப்படையாகப் பேசி வந்துள்ளார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு தேசங்கள் - ஒரு நாடு' என்ற கூட்டு இணைப்பாட்சி (கொன்பிடரேஷன்) கொள்கையை முன்வைத்தே ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட்டேன்.
இதன்படி, இரண்டு தேசங்களுக்கும் சிங்களவர் , தமிழர் பிரதமர்களாக இருக்க வேண்டும். அத்துடன் தனித் தனி நாடாளுமன்றங்கள் இருக்க வேண்டும். ஜனாதிபதி, உப ஜனாதிபதி ஆகிய பதவிகள் சுழற்சி முறையில் இரண்டு தேசங்களுக்கிடையில் பங்கிடப்படும்.
பாதுகாப்பு வெளிவிகாரம் ஆகிய துறைகள் மாத்திரமே ஜனாதபிதி, உப ஜனாதிபதி ஆகியோரின் பொறுப்பில் இருக்கும். பதவிக்காலம் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஜனாதிபதி, உப ஜனாதிபதி பதவிகளை ஒரு தேசம் ஒரே நேரத்தில் கொண்டிருக்க முடியாது.
இத்திட்டம் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் லண்டனிலுள்ள சிங்களவர் ஒருவரின் பொறுப்பிலிருந்த சட்ட அமைப்பினால் புத்திஜீவிகள் சார்பில் தயாரிக்கப்பட்டு 1997ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’