ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், அவரது ஹெலிகாப்டர் குண்டு வைத்து தகர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் நடிகை ரோஜா கூறியுள்ளார்
.ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இப்போது சேருகிறார் நடிகை ரோஜா. இவர் தெலுங்கு தேசத்தில் இருந்து விலகி ராஜசேகர ரெட்டி முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார். ராஜசேகர ரெட்டி மரணத்துக்குப் பிறகு அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியின் தீவிர ஆதரவாளராக மாறினார்.
ஹெலிகாப்டர் விபத்து ஒரு சதி...
புதுக்கட்சியில் இணையும் பரபரப்புடன் ஹைதராபாத்தில் நிருபர்களைச் சந்தித்தார் ரோஜா. அவர் கூறுகையில், "ராஜசேகர ரெட்டி கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போனார். அதில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. ஹெலிகாப்டர் மாயமானது பற்றி மத்திய அரசுக்கு தெரிவித்தும் கூட அவரை மீட்க உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. செயற்கை கோள் மற்றும் நவீன தொழில்நுட்பம் மூலம் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த இடத்தை சில மணி நேரங்களில் கண்டு பிடித்துவிட முடிந்திருக்கும்.
ஆனால் அவரது உடலை மீட்க ஒன்றரை நாள் வரை ஆனது. எதற்காக தாமதப் படுத்தினார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஹெலிகாப்டர் மரத்தில் மோதினால் சில பாகங்கள் தனித்தனியாக கிடந்திருக்கும். ஆனால் துண்டு துண்டாக சிதறிக் கிடந்தது. சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததால்தான் இந்த மாதிரி துண்டு துண்டாக சிதறும். இதுபற்றியும் போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை.
ஹெலிகாப்டர் கறுப்பு பெட்டியில் பதிவான பேச்சு விவரத்தையும் சி.பி.ஐ. வெளியிட மறுத்துவிட்டது. அந்த பேச்சு விபரம் இருந்தால் ஓரளவு உண்மைகள் தெரியவரும்.
ஆந்திர அரசிடம் புதிய ஹெலிகாப்டர் இருந்தும் ராஜசேகர ரெட்டிக்கு பழைய ஹெலிகாப்டரை கொடுத்தது ஏன்? அதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சி.பி.ஐ. போலீசார் முழு அளவில் விசாரிக்கவில்லை. கண்துடைப்புக்காக விசாரித்தது போல் தெரிகிறது. ராஜசேகர ரெட்டி சாவில் யாரை காப்பாற்ற முயற்சிகள் நடக்கிறது என்பதும் மர்மமாகவே உள்ளது.
இதனால்தான் ஜெகன்மோகன் ரெட்டியும் தனது தந்தை சாவில் மர்மம் இருப்பதாக சோனியாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வரானால் ராஜசேகர ரெட்டி சாவில் உள்ள மர்மம் பற்றி முழு அளவில் விசாரணை நடத்தி உண்மைகளை கண்டுபிடித்து விடுவாரோ என்று காங்கிரஸ் பயப்படுகிறது.
திறமையில்லாத ரோசய்யா, கிரண்குமார் ரெட்டி...
இதனால்தான் மக்கள் செல்வாக்கு மிகுந்த அவருக்கு பதவி தராமல் ரோசய்யா, கிரண்குமார் ரெட்டி போன்ற திறமை இல்லாதவர்களை முதல்வர் பதவியில் அமர்த்துகிறார்கள்.
ஆந்திராவின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் மேலிடம் தெலுங்கானா பிரச்சினையை வளரவிட்டது. ஹைதராபாத்தில் கலவரம் மூண்டபோது அதைக் கட்டுப்படுத்தாமல் நகரத்தை சீர் குலைய செய்தனர். தெலுங்கானா- ஐக்கிய ஆந்திரா என்ற பிரிவினையை ஏற்படுத்த காங்கிரஸ் மேலிடம் துணை போனது.
அப்போது ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராகி இருந்தால் ஆந்திராவில் எந்தவித கலவரமும் ஏற்பட்டிருக்காது. தெலுங்கானா குறித்த கலவரங்களும் ஏற்பட்டிருக்காது..." என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’