மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தின் கீழுள்ள ஆற்றில் நேற்று இரவு தோன்றிய அதிசய பாம்புகளினால் அங்குள்ள மக்கள் பெரிதும் பீதியடைந்துள்ளனர். ஒரே தடவையில் ஆயிரக்கணக்கான பாம்புகள் இங்கு படையெடுத்து வந்தமை மக்கள் மத்தியில் பழைய சுனாமி நினைவுகளை மீட்டிப்பார்க்க வைத்துள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட பாரிய சுனாமி அனர்த்தத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர், அதாவது டிசெம்பர் 24ஆம் திகதி இதே ஆற்றில், இதேபோன்ற ஆயிரக்கணக்கான வெள்ளைப் பாம்புகள் தோன்றியிருந்தன. அதேபோன்றதொரு நிலையிலே இப்பொழுதும் தோன்றியிருப்பதனாலேயே மக்கள் மத்தியில் பீதிநிலை காணப்படுகிறது.
மனிதனால் உணரமுடியாத மிக நுட்பமான அதிர்வுகளை அறியக்கூடிய சக்தி பாம்புகளுக்கு இருக்கிறது. ஆற்றில் நீந்திச் சென்ற பாம்புகளை வலைவீசி பிடிக்க முற்பட்ட பலரது முயற்சி தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. சுமார் 3 அடி நீளம்கொண்ட வெள்ளை பாம்புகளின் முதுகில் நீலநிற கோடுகள் காணப்பட்டதாக சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் தெரிவித்திருக்கிறார்கள். அத்தோடு இரண்டு பக்கமும் நீந்திச் செல்லும் சக்தியுடையதாக காணப்பட்டதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.
நேற்று நடைபெற்ற இச்சம்பவம்போலவே 2004ஆம் ஆண்டு சுனாமிக்கு முன்பாகவும் இடம்பெற்றமையாலேயே மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் பெரும் பீதிக்குள்ளாகியிருக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் கடமைநேர உத்தியோகத்தர் மொஹமட் ஷாலிஹீனை 'தமிழ்மிரர்' தொடர்புகொண்டு கேட்டபோது...
'எங்களுக்கும் இதுபோன்ற பல தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. ஆனால், சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறிகள் எதுவுமே இன்னமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. சுனாமி என்பது பாரிய நில அதிர்வு ஏற்பட்டாலே ஏற்படும் சாத்தியம் இருக்கிறது. அப்படி நடைபெறக்கூடிய சூழ்நிலை இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை. எனவே இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் சீரற்ற காலநிலை நிலவுகிறது. இன்று காலை 8.30 வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் 127.8 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியிருக்கிறது. இந்த சீரற்ற காலநிலை மேலும் ஒருவாரம் நீடிக்கக் கூடிய சாத்தியமிருக்கிறது. சீரற்ற காலநிலை இருக்கின்றதே தவிர, சுனாமி ஏற்படக்கூடிய சாத்தியங்கள் எதுவும் கிடையாது. ஆகையினால் பொதுமக்கள் தமது பீதியினை அகற்றி சகஜநிலைக்கு திரும்புவதே சிறந்தது...' என்று குறிப்பிட்டார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’