வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

சுனாமி: "6 வருடங்களாக வீடில்லை"

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 6 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் இலங்கையில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் வீடுகளை இழந்தவர்களின் வீடில்லா பிரச்சினை இன்னமும் தீர்ந்தபாடில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றார்கள்.
இம்மாவட்டத்தில் சுனாமியினால் இருப்பிடமிழந்தவர்களில் அநேகமானோருக்கு மீண்டும் இருப்பிடங்கள் கிடைத்துவிட்ட போதிலும் குறிப்பாக சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த 405 குடும்பங்கைளக் கொண்ட சுமார் 2000 பேர் இன்னமும் தற்காலிக இருப்பிடங்களிலும் உறவினர்கள்,நண்பர்கள் வீடுகளிலும் தொடர்ந்தும் தங்கியிருக்கின்றார்கள்.
6 மாதங்களுக்கென அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டில்களில் கடந்த 6 வருடங்களாக போதிய அடிப்படை வசதிகளின்றி நெருக்கடியான நிலையில் இவர்களில் கணிசமான குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல் தலைவரான அப்துல் முனாகீர் கூறுகிறார்.
தங்களின் இந்த நிலை குறித்து ஜனாதிபதி, முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என 14 பேருக்கு மகஜர்களை அனுப்பி வைத்திருந்த போதிலும் ஜனாதிபதி மற்றும் வேறு ஒரு சிலரிடமிருந்தே பதில் கிடைத்துள்ளது என்கின்றார்.
வீடில்லாத காரணத்தினால் தமது பெண் பிள்ளைகளின் திருமணங்கள் கூட தடைப்படுவதாக அங்குள்ள பெற்றோர்களில் பலரும் கவலையடைந்தவர்களாக காணப்படுகின்றார்கள்.
தனது 22 வயது பெண் பிள்ளைக்கு 4 இடங்களில் மாப்பிள்ளை பார்த்ததாகவும், ஆனால் வீடில்லாத காரணத்தால் எந்த ஒரு இடத்திலிருந்தும் சாதகமான முடிவுகள் கிடைக்கவில்லை என்றும் அம் முகாமில் வசித்து வரும் இளையம்மா மன்சூர் என்ற தாய் தனது கவலையை வெளியிட்டார்.
இவர்களுக்கு வீடுகளை அடுத்த ஆண்டு அமைத்துக் கொடுப்பதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் "இவாட் " நிறுவனமும் முன்வந்துள்ளதாகக் கூறும் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், அடுத்த சில் மாதங்களில் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்கின்றார்.
ஆனால் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் வீட்டுத் திட்ட வேலைகள் ஆரம்பிக்கப்படாது போனால் தாம் வீதியிலிறங்கி போராடத் தயாராகி விட்டதாக வீடற்ற பலரும் கூறுகின்றார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’