கொழும்பு – யாழ் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட விரும்பும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு ஜனவரி 10 ஆம் திகதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படும் என தனியார் போக்குவரத்துச் சேவைகள் அமைச்சர் சி.பி. ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கான வருடாந்த கட்டணம் சொகுசு பஸ்களுக்கு 11 லட்சம் ரூபா எனவும் அரைச்சொகுசு பஸ்களுக்கு 7 லட்சம் ரூபா எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை தனியார் பஸ் சாரதிகளுக்கும் நடத்துநர்களுக்கும் ஓய்வூதியத்திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர்கள் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றிலும் அங்கத்தவர்களாக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் முறையான கேள்விப்பத்திர நடைமுறையை பின்பற்றாததால் கொழும்பு – யாழ் வழித்தடத்தில் அளவுக்கதிமான தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாக தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
'சுமார் 100 பஸ்கள் அவ்வழித்தடத்தில் சேவையில் ஈடுபடுகின்றன. அவற்றில் பெரும்பாலனவற்றுக்கு அனுமதிப்பத்திரம் கிடையாது. யாழ்- கொழும்பு வழித்தடம் குறித்த மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப பஸ் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முறையற்ற நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கத்திற்கு பல மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகிறது என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே ஜனவரி 10 ஆம் திகதி மேற்படி அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படும் என அமைச்சர் ரட்னாயக்க இன்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் இரவிலும் சேவையில் ஈடுபட வேண்டும் எனவும் இதற்காக ஜனவரி முதல் நேரஅட்டவணை அறிமுகப்படுத்தப்படும் எனவம் அவர் தெரிவித்தார்.
'போக்குவரத்துச் சேவையில் 60 சதவீதம் தனியார் பஸ்கள் மூலமும் 40 சதவீதம் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்கள் மூலமும் இடம்பெற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கொள்கை. இதற்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு இன்னும் 2000 பஸ்கள் தேவைப்படுகின்றன. எனவே 1000 பஸ்களை இறக்குமதி செய்வதுடன் மேலம் 1000 பஸ்களை பழுதுபார்ப்பதற்கு திட்டமிட்டுள்ளேன்' எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’