பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் லியோனி குயுலெனாரே அம்மையார் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வாசஸ்தலத்திற்கு வருகை தந்த நெதர்லாந்து தூதுவர் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் வடபகுதி நிலைமைகளையும் கேட்டறிந்தார். குறிப்பாக யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகள் வடபகுதி மக்களின் மீள்குடியேற்றம் வாழ்க்கைத்தரம் போன்ற விடயங்களை ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சரவர்கள் யாழ். குடாநாடு உள்ளிட்ட வடபகுதி நிலைமைகளை எடுத்துக் கூறியதுடன் தற்போது ஏற்பட்டுள்ள ஜனநாயக சூழ்நிலையில் நம்பிக்கையினைப் பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டியதுடன் சமாதானம் அபிவிருத்தி அரசியல் தீர்வு என்பன சமகாலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்கூறினார். இதன்பிரகாரம் அபிவிருத்தி நடவடிக்கைகளில் வெளிநாட்டு அரசாங்கங்களினதும் புலம் பெயர்ந்த தமிழ்பேசும் மக்களினதும் உதவிகள் முதலீடுகள் ஆலோசனைகள் என்பன முக்கியமானதாகும் எனவும் தெரிவித்தார்.
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் லியோனி குயுலெனாரே அம்மையாரை சந்தித்து கலந்துரையாடியதன் நிறைவாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து நிலைமைகளை நேரடியாகப் பார்வையிடுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அழைப்பு விடுத்தார். இவ்வழைப்பினை தூதுவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். இச்சந்திப்பின்போது யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அமைச்சரின் ஆலோசகர் திருமதி வீ.ஜெகராசசிங்கம் ஆகியோரும் உடனிருந்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’