அண்மைக் காலங்களில் பல பொது நிறுவனங்களில் கோதுமை உணவுகளை இலங்கை அரசாங்கம் தடை செய்து வருகின்றது. அரசாங்கத்தில் இருக்கக்கூடிய தேசியவாதக் கூறுகள் கூட ''கோதுமைப் பயங்கரவாதம்'' என்ற விடயம் குறித்துப் பேசும் அளவுக்கு அங்கு நிலைமை சென்றிருக்கிறது.
கோதுமையில் செய்யப்படும் பண்டங்களுக்கு இலங்கையில் எப்போதுமே பெரும் மதிப்பு உண்டு. அது தேங்காய் ரொட்டியாக இருக்கலாம், பாணாக இருக்கலாம், கேக்குகள் அல்லது ஏனைய சிற்றுண்டிகளாக இருக்கலாம்- இவையெல்லாம் இலங்கை மக்களால் மிகவும் விரும்பி உண்ணப்படும் உணவுகளாகும்.
இருந்தபோதிலும், தற்போது கோதுமை உணவுகள் இலங்கையின் மருத்துமனைகளில் இருந்து அகற்றப்படுகின்றன. கோதுமையில் செய்யப்படும் பெரும்பாலான விரைவு உணவுகள் பள்ளிக் கூடங்களின் உணவு விடுதிகளில் தடை செய்யப்படுகின்றன.
''கோதுமை ஒரு வெளிநாட்டு இறக்குமதி, கட்டாயமாக அரிசியை உண்ணும் சமூகத்துக்கு இது அந்நியமானது, பொருளாதாரத்துக்கும் அது மிகவும் பாரத்தைக் கொடுக்கிறது'' என்று அரசாங்கம் இதற்குக் காரணம் கூறுகிறது.
ஆனால், இலங்கையில் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் ஏற்படும் நிலைமையை திசை திருப்பவே அரசாங்கம் இப்படியான விசயங்களை செய்வதாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், அதற்காக அரசாங்கம் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளையும் கண்டிக்கிறார்கள்.
கோதுமைக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்ற அரசாங்கக் கட்சிகளின் ஒன்றான தேசிய சுதந்திர முன்னணி கோதுமை வணிகத்தை பயங்கரவாதத்தின் ஒரு வடிவமாக சித்தரிக்கின்றது.
இலங்கையின் உணவுப் பாதுகாப்பை குறைப்பதற்காக பல்தேசியக் கம்பனிகள் செய்யும் சதிதான் இந்தக் கோதுமை என்று அரசாங்கத்தின் இந்த கடுமையான தேசியவாதப் பிரிவு கூறுகிறது.
கோதுமையின் பாவனையைக் குறைப்பது என்பது, விடுதலைப்புலிகளை தோற்கடித்ததை விட சிறப்பான ஒரு வெற்றி என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட கூறியிருக்கிறார்.
அரிசி மீதான அனைத்தையும் கடந்த பாசத்தை ஒரு ஆசிய நாடு வெளியிடுவது என்பது இது ஒன்றும் முதல் தடவை அல்ல.
ஆனால் தமக்கு இதனால் என்ன பாதிப்பு ஏற்படுமோ என்று இலங்கையின் பெரும்பாலான கோதுமை உணவு விரும்பிகள் ஆதங்கப்படுகிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’