வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 16 நவம்பர், 2010

நாங்களும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கியிருந்தோம்; குற்ற நடவடிக்கைகளில் அவர்கள் சம்பந்தப்படக் கூடிய நிலைமை ஏற்படக்கூடும் – மக்கள் விடுதலைக் கழக தலைவர் எச்சரிப்பு…!!!

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தமது ஆதரவாளர்களின் நிலைமை முழுமையாக அலட்சியப்படுத்தப்பட்டிருப்பதாக அரச சார்பு தமிழ்ப் போராளி அமைப்புகளின் தலைவர்கள் கூறுகின்றனர்.முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக மனித உரிமைக் குழுக்கள் திருப்பதியடைந்திருக்காத நிலையில், தமது ஆதரவாளர்களும் யுத்தத்திற்குப் பின்னரான நிலைமையில் சமூகத்தில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என இந்தத் தலைவர்கள் கூறுவதாக பி.பி.சி.யின் சிங்கள செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது.

தனது ஆதரவாளர்களின் நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்தும் புறக்கணிப்பார்களேயானால் மோசமான விளைவுகள் ஏற்படுமென முன்னாள் எம்.பி.யும் தமிழீழ மக்கள் விடுதலை கழக (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எச்சரித்துள்ளார்.புலிகளைப் போன்றே நாங்களும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கியிருந்தோம் என்று அவர் பி.பி.சி.யின் சிங்கள செய்திச் சேவைக்குத் தெரிவித்திருக்கிறார். இப்போது அவர்களில் பலர் தொழில் வாய்ப்பின்றியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
முன்னாள் தமிழ்ப் புலிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையைத் தான் எதிர்க்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் சித்தார்த்தன் ஏனைய தமிழ்க்குழுக்களை மறந்துவிடக்கூடாதென அழுத்தியுரைத்துள்ளார். அவர்கள் தமிழ்ப்புலிகளின் புனர்வாழ்வு பற்றி மட்டுமே கதைக்கின்றனர். எமது பையன்கள் எம்மைவிட்டு விலகிச் சென்றபோது தமது குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கான எந்த வழியும் இல்லை. குற்ற நடவடிக்கைகளில் அவர்கள் சம்பந்தப்படக் கூடிய நிலைமை ஏற்படக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.
8 ஆயிரத்துக்கு அதிகமான முன்னாள் புலி உறுப்பினர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஏனைய தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு இத்தகைய முயற்சிகள் எதனையும் அரசாங்கம் மேற்கொண்டதாகத் தென்படவில்லை எனக் கூறப்படுகிறது. விடுதலைப்புலிகளைப் போன்றல்லாமல் இந்தக் குழுக்கள் இலங்கைஇந்திய சமாதான உடன்படிக்கையின் ஏற்பாட்டுக்கு இணங்கிக் கொண்டவர்களாகும்.
தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் தாங்களே எனப் பிரகடனப்படுத்திய புலிகள் ஏனைய தமிழ்க் குழுக்களை கலைத்திருந்தனர்.”1990 இற்குப் பின்னர் எமது உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் இரகசியமான முறையில் இலங்கையில் இருந்தனர். அதேசமயம், ஏனையவர்கள் இந்தியாவுக்குச் சென்றிருந்தனர். ஏனெனில் அரசாங்கம் அச்சமயம் அவர்களை தேடிக் கொண்டிருந்தது. அத்துடன், தமிழ்ப்புலிகள் பலரைக் கொன்று கொண்டிருந்தனர்’ என்று முன்னாள் வட, கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் கூறியுள்ளார். அக்காலப் பகுதி தொடக்கம் இரு தசாப்தங்களாக அவர் இந்தியாவில் வசித்து வந்தார்.
நூற்றுக்கணக்கான உறுப்பினர்களும் அவர்களுடைய குடும்பங்களும் இப்போது தமிழ்நாட்டில் வசிக்கின்றனர். அகதி முகாம்களில் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் அவர்கள் அங்குள்ளனர் என்று பெருமாள் கூறியள்ளார்.முன்னாள் தமிழ்ப்போராளிகள் சிலர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடுமென சித்தார்த்தன் அஞ்சுகிறார்.இலங்கையில் தங்கியிருக்கும் தனது ஆதரவாளர்களுக்கு வாழ்க்கை மிகவும் நெருக்கடியாக இருப்பது நிரூபணமாகியிருப்பதாக அவர் கூறுகிறார்.
2002 இல் அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் நோர்வேயின் அனுசரணையுடன் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் சகல போராளிக் குழுக்களும் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கோரப்பட்டிருந்தது. ஆயினும் பலர் ஆயுதங்களையும் உறுப்பினர்களையும் தொடர்ந்தும் வைத்திருந்தனர். எவ்வளவு பேர் ஆயுதங்களை வைத்திருக்கின்றார்கள் என்பது தொடர்பாக முறையான கணிப்பீடுகள் தங்களிடம் இல்லையென்பதை அரசாங்கமும் முன்னாள் போராளிக் குழுக்கள் தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை மட்டுமே அவர்களுக்குத் தெரியும். ஆதலால் அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்காவிடின், அல்லது புதிய வாய்ப்புகளை வழங்க முன்வராவிடின் தமிழ்ச் சமூகத்துக்கு பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்று சித்தார்த்தன் கூறியுள்ளார்.
அதேசமயம், புனர்வாழ்வுக்குப் பொறுப்பான அமைச்சர் டியூ குணசேகர;தமிழ்ப்புலிகள் அல்லாத போராளிகளும் புறக்கணிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.பொருளாதார ரீதியில் அவர்களை சக்தியுடையவர்களாக்குவதற்கான சில நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டிய தேவையுள்ளதென்று அவர் கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து ஏற்கனவே முன்னாள் போராளிக் குழுக்களின் தலைவர்களுடன் தான் கலந்துரையாடியிருப்பதை அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார். எனது அமைச்சு அவர்களுக்கு உதவுவதற்கு விசேட திட்டத்தை நிச்சயமாக முன்வைக்கும் என்று அமைச்சர் குணசேகர கூறியுள்ளார்.
இதேவேளை, வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பீதி, அச்சுறுத்தல் நிலைமை இருப்பதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.இந்தக் குற்றச் செயல்களில் சிலவற்றுக்கு முன்னாள் போராளிகளின் நேரடித் தொடர்புகள் இருப்பதாக சித்தார்த்தன் தெரிவித்திருக்கிறார்.குறிப்பிட்ட குற்றச் செயல்களில் எமது அமைப்புகளின் முன்னாள் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பது எமக்குத் தெரியும். ஏனெனில் அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆயுதங்களை எவ்வாறு கொண்டு செல்வது என்பது மட்டுமே அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படவில்லை. அவர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். சமூகத்துடன் ஒருங்கிணைய அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட வேண்டுமென்று சித்தார்த்தன் கூறுகிறார்.இவை தமிழ்ச்சமூகம் எதிர்காலத்தில் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளாக இருக்குமென்றும் சித்தார்த்தன் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’