இந்தியாவில் ரியாலிடி ஷோ எனப்படும், உண்மைச் நிகழ்வுகளை காட்டும் நிகழ்ச்சிகளில் வயது வந்தோர்கள் மட்டுமே பார்க்கும் வகையிலான காட்சிகள் இருந்தால் அப்படியான நிகழ்ச்சிகளுக்கு கிடுக்கிப்பிடி போடும் நடவடிக்கையில் இந்திய அரசு இறங்கியுள்ளது.
மாலை நேரங்களில் பெருமளவிலான மக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் நேரத்தில், இரண்டு தொலைக்காட்சிகளில் வரும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரபல பே வாட்ச் நிகழ்ச்சியின் முன்னாள் நட்சத்திரமான பமீலா ஆண்டர்சன், பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக, அதற்கான இல்லத்தில் நுழைந்த அடுத்த நாள் அரசு இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று புதன்கிழமை இரவு முதலே அமலுக்கு வருவதாக இந்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வீணா மாலிக், அதாவது கிரிக்கெட் பந்தய ஊழலில் சிக்கிய பாகிஸ்தான் வீரர் முகமது ஆசிஃபின் தோழி, தனது உடலில் கட்டியிருந்த டவலை நழுவ விடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றதும் சர்ச்சைக்குரிய காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் நெருக்கமான முத்தக் காட்சிகளும் இடம் பெறுகின்றன.
அதேபோல், ராக்கியின் நீதி என்ற இன்னொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் அதன்பிறகு தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, நிகழ்ச்சியை நடத்தும் ராக்கி சாவந்த் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் இனி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையிலான நேரப் பகுதியிலேயே ஒளிபரப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுவும், அந்த நிகழ்ச்சிகள் வயது வந்தோருக்கு மட்டுமே என்ற அறிவிப்புடன் வெளியாக வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்னொரு முக்கிய நடவடிக்கையாக, அதுபோன்ற ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் இருந்து குறிப்பிட்ட காட்சிகள் செய்தித் தொலைக்காட்சிச் சேனல்கள் பகல் நேரங்களில் ஒளிபரப்புவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல செய்தித் தொலைக்காட்சிகள் அந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து பலமுறை ஒளிபரப்புகின்றன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’