வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 17 நவம்பர், 2010

ஈ.என்.டி.எல்.எப். யினரால் பெங்களுர் நகரில் நடைபெற்ற ஈழத் தமிழர் சிறப்பு மாநாடு! : தீர்மானங்கள்!

13,14 ஆம் திகதிகளில் ஈ.என்.டி.எல்.எப். யினரால் பெங்களுர் நகரில் நடைபெற்ற ஈழத் தமிழர் சிறப்பு மாநாடுபற்றிய விபரம்:-
__________________________________________________ ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) 2009, 2010 ஆகிய இந்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச ஈழத் தமிழர்கள் அடங்கிய மாநாடு ஒன்றினை நடத்துவதற்கு நான்கு தடவைகள் தமிழக அரசிடம் அனுமதி கோரியது. ஓவ்வொரு முறையும் ஏதாவது காரணங்கள் கூறி ஈழத் தமிழர்கள் நடத்தும் அந்த மாநாட்டினை தடுத்தது தமிழக அரசு. இறுதியாக பல்லாவரத்தில் ஓர் திருமண மண்டபத்தைப் பதிவு செய்து அனுமதி கோரியபோது போக்கு வரத்து நெரிசல் ஏற்படும் என்று அனுமதி மறுக்கப்பட்டது. ஈழத் தமிழர்கள் ஒன்று கூடி தங்களது உரிமைகளை வென்றெடுக்க எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கவே அந்த மாநாடு கூட்டப்படவிருந்தது. அனுமதி கோரிய கடிதத்தில் இதுபற்றி விளக்கமாகக் குறிப்பிட்டுத்தான் அனுமதி கோரினோம். ஈழத் தமிழர்கள் தங்களது எதிர்காலம் பற்றித் தீர்மானிக்கும் உரிமை மறுக்கப்பட்டதுதான் அவற்றின் மறுப்புக்கு உள்ளார்த்தமாகும். இதன் பின்னர் மத்திய அரசுடன் கதைத்து அதே சர்வதேச மாநாட்டினை டெல்லியில் நடத்துவதற்கு நாம் அனுமதி கோரினோம், அனுமதி வழங்கப்பட்டது. 12,13 -02 -2010 சனி, ஞாயிறு ஆகிய திகதிகளில் அனுமதி வழங்கப்பட்டது.


அனுமதி 10 நாட்களில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. பசிதம்பரம் அவர்கள் ஓர் அறிவிப்பினை வெளியிட்டார், அதில் இலங்கை, பாகிஸ்தான், பங்ளாதேஸ் மற்றும் ஈரான் நாட்டவர் இநதியாவில் மாநாடு நடத்தினால் 90 நாட்களுக்கு முன்னராக உள்துறை அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்று அறிவித்தார். நிறுத்தப்பட்டது மாசி மாதத்து மாநாடு. இதில் தமிழக அரசியலின் பின்னணி இருந்தது என்று நாம் கருதினோம்.

இதன் பின்னர் நாம் வெளிநாடுகளிலிருந்து பிரதிநிதிகளை அழைப்பதில்லை என்றும் இந்தியாவில் அகதிகளாக இருக்கும் ஈழத்தமிழர்கள் அனைவரையும் அழைத்து எதிர்காலம் பற்றித் தீர்மானிக்கலாம் என்று முடிவெடுத்தோம். சர்வதேச ஈழத் தமிழர்களது மாநாட்டில் சுமார் எண்பது தமிழ் அறிஞர்கள் அனைத்து நாடுகளிலிருந்தும் பங்குபெறுவதற்கு தங்களது விருப்பத்தைத் தெரிவித்திருந்தனர். அவர்களது பெயர் விபரங்களை நாம் முன்னரே மத்திய அரசிடம் சமர்ப்பித்திருந்தோம். இருந்தும் மறைமுக காரணங்களால் மறுக்கப்பட்டது ஈழத் தமிழர்களுக்குப் பின்னடைவுதான்.

எனவேதான் இந்தியாவில் இருக்கும் ஈழத் தமிழர்கள் ஒன்று கூடித் தீர்மானிப்பது என்று 13,14 -11 -2010 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு திகதிகளில் மாநாட்டினை நடத்தினோம். இந்த இரண்டு நாள் சிறப்பு மாநாட்டில் 500 அங்கத்தினர் கலந்து கொண்டனர் இப்படிக் கலந்து கொண்டவர்களில் 250 பேர் கடந்த இருபது ஆண்டுகளாக தமிழகத்து முகாம்களில் வாழ்ந்து வருபவர்களின் பிரதிநிதிகள், இயக்க உறுப்பினர்கள் 150 பேர் ஏனையோர் எந்த அரச உதவியும், அங்கீகாரமும் இல்லாமல் முகாம்களுக்கு வெளியில் வாழ்பவர்கள்.

இந்த மூன்று பகுதியினரும் தங்களது 20 ஆண்டுகால தமிழக வாழ்வு பற்றியும் தங்களது அடிமை நிலைப்பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தனர். அவர்கள் கூறிய பல வேதனைகளில் ஒன்றை மட்டும் இங்கே தருகிறோம். முகாமில் இருக்கும் ஈழத்து அடிமைகள் முகாமை விட்டு வெளியில் செல்வதென்றால் காலை ஆறுமணிக்குச் சென்று மாலை ஆறு மணிக்கு மீண்டும் திரும்பி வந்துவிட வேண்டும். வெளியில் செல்லும் போது கையொப்பமிட்டுச் செல்ல வேண்டும், திரும்பி வரும்போதும் கையொப்பம் இட வேண்டும்.

ஒரு நாள் ஒரு நபர் கையொப்பம் இடாமல் வேலைக்குச் சென்று விட்டார். மீண்டும் மாலையில் திரும்பிய போது கியூ பிரிவு அதிகாரி அங்கே வந்தார். ஏதற்குக் கையொப்பம் போடாமல்ச் சென்றாய்? ஏன்றார், அவரோ பதில் சொல்ல முடியாமல் நின்றார், உடனே அந்த அதிகாரி அந்த ஈழத் தமிழரை முழந்தாள் இட்டு நிற்கும்படி உத்தரவிட்டார். அவரும் பயந்து முழங்காலில் நின்றார். பலர் முன்நிலையிலும் வைத்து அவரது கன்னங்களில் மாறி மாறி அறைந்தார் அந்த அதிகாரி. இதை அவர் விபரிக்கையில் அவரது கண்களிலிருந்து நீர் பெருகியது. இதற்காகவா நாம் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தோம், அன்றே தற்கொலை செய்திருக்கலாம் என்று தோன்றியதாம் அவருக்கு, அப்படிச் செய்தால் அவரது இரண்டு குழந்தைகளும் அனாதையாகிவிடுவர் என்று இன்னும் அந்த அவமானத்துடன் அலைகிறார்” என்றார் வந்திருந்த பிரதிநிதி.

இது அடிமை வாழ்க்கையா இல்லையா? எத்தனை ஆண்டுகள்? ஏறக்குறைய 27ஆண்டுகள் எங்கள் இனம் அடிமையாக தமிழகத்தில் வாழ்கின்றனர். அகதி ஒருவருக்கு குறைந்தபட்ச உரிமை என்றுகூட எதனையும் அவர்கள் கோர முடியாது. தனது குடும்பம் பற்றிய முடிவைக்கூட ஒரு அகதி தீர்மானிக்க முடியாது.

விடுதலை கிடைக்கும் என்று இத்தனை ஆண்டுகள் இவர்களது கொடுமைகளைத் தாங்கிக் கொண்டிருந்தனர் எங்கள் அகதிகள். இந்தியாவிலிருக்கும் அகதிகள் அடிமை வாழ்வை அனுபவித்துவிட்டு மீண்டும் சிங்களவரிடத்து அடிமைகளாகச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பிறநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இப்படி ஓர் நிலை ஏற்படாது, ஆனால் இந்தியாவில் இருக்கும் அகதிகள் வாழ்வுதான் கேள்விக்குறியாகிவிட்டது.

எனவேதான் இந்தியாவைக் கோருகிறோம் நீங்கள் அளித்த வாக்குறிதியை நிறைவேற்றிக் கொடுங்கள் என்று. அதற்காக நடத்தப்பட்டதுதான் இந்த இரண்டு நாள் மாநாடு. இந்தச் சிறப்புக் கூட்டத்துக்கு தலைமை தாங்கியவர் திரு. தயாபரன் அவர்கள், ஈ.என்.டி.எல்.எப். தலைவர் உயர்திரு. ஞா.ஞானசேகரன் அவர்கள் சுமார் நான்குமணி நேரம் உரையாற்றினார்கள். அந்த உரை பின்னர் தளத்தில் ஒலி வழியாகக் கேட்கலாம். மேலும் திரு. மங்களராஜா அவர்கள், திரு. தம்பி தோழர் அவர்கள், திரு. நாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள், திரு. வசீகரன் அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.

முகாமில் வாழ்ந்துவரும் மக்களின் பிரதிநிதிகளும், முகாமுக்கு வெளியில் வாழ்ந்துவரும் மக்களின் பிரதிநிதிகளும் உரையாற்றினர். இந்த மாநாட்டின் மூலம் ஈழத் தமிழருக்கான நாட்டுப்பண் ஒன்று முன்மொழியப்பட்டது. அந்தப் பாடலில் சில திருத்தங்கள் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டதனால் அந்தப் பாடல் மீண்டும் பதிவு செய்யப்பட்டு வலைதளத்திலும் விரைவில் ஒலிபரப்பப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

ஈழத் தமிழரின் இந்தச் சிறப்பு மாநாட்டினை நடத்துவதற்கு அனுமதியளித்த கர்நாடக மக்களுக்கும், கர்நாடக அரசுக்கும், கர்நாடக காவல்துறையினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை ஈழத் தமிழர்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

அரசியல் பிரிவு

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி

(ஈ.என்.டி.எல்.எப்.) 16-11-2010 __________________________________________________

2010ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 13 மற்றும் 14ம் நாட்களில் பெங்களுரில் நடைபெற்ற இரண்டு நாள் சிறப்புக் கூட்டத்தில் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

(01) ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யினர் இந்தியாவின் வளர்ச்சிக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானவர்கள் அல்ல. பலதரப்பினரும் எதிர்த்தவேளை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இறுதிவரை ஆதரித்துச் செயற்பட்டது ஈ.என்.டி.எல்.எப். இயக்கம். மறைந்த பாரதப் பிரதமர் இராஜீவ்காந்தி அவர்களது வாக்குறுதியை ஏற்று மாநில அரசொன்றை ஏற்படுத்துவதற்காக 1700க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களை இழந்துள்ளது ஈ.என்.டி.எல்.எப். ஆதலால் இன்றைய நிலையில் எங்களது ஈழத்தமிழ் இனத்தை சிங்கள எதிரிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று இந்தியாவிடம் கோரும் உரிமை எங்களுக்கு உண்டு.

(02) சிங்கள ஆட்சியாளர் தமிழ் இனத்தவரை வாழவைக்கப் போகிறார்கள், உரிமைகள் வழங்கப் போகிறார்கள் என்று கூறுவதும், எதிர்பார்ப்பதும் வீனான கற்பனையாகும். தமிழ் இனத்தை அழிப்பதுதான் பௌத்த சிங்கள இனத்தவரின் கொள்கையாகும். இதனைத் தடுத்து நிறுத்தத்தான் இந்தியா 1987ல் இலங்கை விடயத்தில் தலையிட்டது. 50,000 துருப்புகளை வைத்துக் கொண்டு தமிழருக்கு உரிமை பெற்றுக் கொடுக்க முடியாமல் திரும்பியது இந்தியா. சிங்களத் தலைமை ஓர் நயவஞ்சகமான தலைமை, அவர்களை நம்பி எந்த ஒப்பந்தமும் செய்ய முடியாது. எனவே இந்தியா ஈழத் தமிழரையும் அவர்களது உரிமைகளையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், முன்னைநாள் பிரதமர் அமைதிப்படையை அனுப்பியது போன்று ஓர் படையை அனுப்பி தமிழ் இனத்துக்கு உயிர்ப் பாதுகாப்பையும் நில உரிமையையும் பெற்றுத் தரவேண்டும் என்று ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) ன் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

(03) 1987ஆம் ஆண்டு ஈழத் தமிழ் மக்களுக்கு வாக்குறுதி அளித்ததன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்த அனைத்து அதிகாரங்களும் உள்ளடக்கிய மாநிலம் ஒன்றினை ஈழத் தமிழ் மக்களுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் என இந்திய அரசை வேண்டிக்கொள்கிறோம்.

(04) இந்தியாவையும் ஈழத் தமிழ் மக்களையும் சிறிலங்கா அரசு பல தடவைகள் ஏமாற்றியுள்ளது. மறுவாழ்வு, மறு கட்டமைப்பு என்று கூறி சிறிலங்கா அரசு சிங்கள மக்களைத் தமிழர் பகுதிகளில் குடியேற்றி வருகிறது. இதனை இந்தியா உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய அரசை வேண்டிக்கொள்கிறோம்.

(05) பிரித்தானியரிடமிருந்து விடுபட்ட 1948ஆம் ஆண்டுக்குப் பின்னர், தமிழரது பூர்விக நிலங்களில் சிங்கள அரசால் குடியமர்த்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தையும் முற்றாக அகற்ற வேண்டும்.

(06) புத்த பிக்குகள் ஈழத்தமிழருக்குச் சொந்தமான பூர்விகப் பகுதிகளில் எங்கெங்கு அரசமரங்கள் இருக்கின்றனவோ அவற்றின் கீழே பொளத்த மதத்தைப் பரப்ப அரசின் பலத்த ஆதரவோடு புத்தர் கோவில்களைக் கட்டி வருகின்றார்கள். அவ்வாறு கட்டும் சட்டத்திற்குப் புறம்பான செயலைத் தடுத்த நிறுத்த வேண்டும் எனவும், ஏற்கனவே கட்டப்பட்ட புத்தர் கோவில்களை இடித்து அகற்ற வேண்டும் என்றும் இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

(07) 2009ஆம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்றது பயங்கரவாத எதிர்நடவடிக்கை அல்ல, சிங்கள இனத்தவரின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைதான் அங்கு நடைபெற்றது. பயங்கரவாதம் என்று உலகுக்குக் காண்பித்த சிங்கள அரசு செய்தது இனப்படுகொலைதான். இதனை விசாரிப்பதற்கு மிகப்பெரிய சக்திவாய்ந்த ஜனநாயக நாடான இந்தியா முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இந்திய மக்கள் இதனை கண்டிப்பாக வரவேற்பார்கள். எந்த நாடும் தனது சொந்த மக்கள் மீது இவ்விதம் குண்டுகள் வீசி அழித்தது கிடையாது. அங்கு நடைபெற்றது எதிர் நாட்டின் மீது படையெடுப்புத்தான், எனவே நடத்தப்பட்ட படுகொலைகள் விசாரிக்கப்படுவதற்கு இந்தியா முன்மொழிய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

(08) ஈழத் தமிழரது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்கள் ஈழத்துக்குத் திரும்பும் வரை, தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களை பராமரிக்கும் பொறுப்பினை மத்திய அரசு நேரடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். சுதந்திரம் கேட்ட எங்கள் மக்கள் தமிழக பொலிசாரால், குறிப்பாக கியூ பிரிவினரால் முகாம்களுக்குள் அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து எங்கள் மக்களை மத்திய அரசு மீட்டுத் தர வேண்டும். தீபெத்திய அகதிகளுக்கு வழங்கிய உரிமைகள் போன்று ஈழத் தமிழ் மக்களுக்கும், அவர்கள் நாடு திரும்பும் வரை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்விதமான ஓர் தீர்வொன்றினை ஏற்படுத்திக்கொடுக்கும் வரை இந்தியாவில் இருக்கும் ஈழத்து அகதிகள் யாரையும் திருப்பி அனுப்பக்கூடாது என்று இந்தியாவைக் கேட்டுக்கொள்கிறோம்.

(09) வடக்குக் கிழக்குக் கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமை தமிழர்களுக்கு மட்டுமே உண்டு. வடக்கு-கிழக்குக் கரையோரப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட சிங்கள மீனவர் குடியிருப்புகளை அகற்ற வேண்டும்.

(10) மேற்படி கோரிக்கைகள் அனைத்தும் சாத்தியம் இல்லை என்று இந்தியா கருதினால், சிறிலங்கா அரசு தமிழர் மீது யுத்தம் புரிவதற்கு நிதி உதவி வழங்குவதற்காக, “நன்கொடை நாடுகள்” என்று (DONORS COUNTRIES) ஓர் அமைப்பை ஏற்படுத்தி போர்க்கருவிகள் வாங்குவதற்கு பெருமளவு பணஉதவி செய்தனர் அதேபோன்று தமிழ் இனத்தின் பிரச்சினைகளைத் தீர்த்து உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க, தமிழர்கள் அகதிகளாக வாழும் நாடுகள் அனைத்தையும் இணைந்த அமைப்பொன்றினை ஏற்படுத்த வேண்டும். “சமாதான நாடுகள்” என்ற அமைப்பின் மூலம் எங்கள் இனத்தின் பிரச்சினைகளை ஆராய்ந்து உண்மைகளைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வொன்றினை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் இந்தியாவைக் கேட்டுக்கொள்கிறோம்.

மேற்படி தீர்மானங்கள் அனைத்தும் இந்த சிறப்புக் கூட்டத்தில் ஒரே மனதாக தீhமானிக்கப்பட்டன.

No:- 6/7, Poornima Appartment, United India Colony, Second Main Road, Kodambakkam, Chennai – 600 024. T.P.N0 :- 94447 35939, email:- endlfnews@gmail.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’