இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த எஸ். எம். கிருஸ்ணா அவர்கள் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட பின்னர் நாடு திரும்பும் தருணத்தில் அவரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்ந்த இச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஸ்ணா அவர்கள் தாம் அவசரமாக நாடு திரும்ப வேண்டியிருப்பதால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன்படி தமிழ் கட்சிகளின் அரங்கத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சந்திக்க முடியாமல் போயுள்ள விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.
இதேவேளை இச்சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளைப் புரிந்து வரும் இந்திய அரசிற்கு தமிழ் மக்களின் சார்பாகவும் ஒரு அமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்தின் சார்பாகவும் நன்றி தெரிவித்திருந்ததோடு தொடர்ந்தும் தமிழ் மக்களின் மீள் குடியேற்றப்பணிகள் மற்றும் வாழ்வாதார வசதிகளுக்கான உதவிகளை இந்தியா வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்ததோடு கடந்த தடவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களோடு இந்தியா வந்திருந்த சமயம் தாம் விடுத்திருந்த கோரிக்கையினை அடுத்து இந்திய பிரதமர் திரு. மன்மோகன்சிங் அவர்கள் வாக்குறுதி அளித்தபடி இடம்பெயர்ந்து இடர்படும் ஈழத்தமிழர்களுக்கான ஐம்பதாயிரம் வீடமைப்புத்திட்டமானது ஆரம்பித்து வைக்கப்பட்டமை என்பது ஈழத்தமிழர்கள் மீதான இந்தியாவின் அக்கறையினை வெளிப்படுத்தியிருப்பதோடு மட்டுமன்றி இது இலங்கை இந்திய உறவை மேலும் பலப்படுத்தவும் வழி சமைக்கும் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இலங்கைத்தீவில் நிலவும் அரசியலுரிமைப் பிரச்சினைக்கான தீர்வு என்பது 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே ஆரம்பம் ஆகும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஸ்ணா அவர்கள் தெரிவித்திருந்தமை குறித்து கருத்துத் தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இது குறித்து தான் பெரிதும் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைவதாகவும் இதையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களும் நிறைவேற்றி வைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தங்களின் இந்த கருத்தானது ஜனாதிபதி அவர்கள் அதை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு மேலும் பலம் சேர்த்திருக்கின்றது என்றும் தெரிவித்திருந்ததோடு தமிழ் கட்சிகளின் அரங்கத்தினால் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கையளிப்பதற்கென தயாரித்து வைத்திருக்கும் மகஜரை இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் ஊடாக தமிழ் கட்சிகளின் அரங்கம் அனுப்பி வைக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
இச்சந்திப்பின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஸ்ணா அவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இந்திய தலைநகர் புதுடில்லி வருமாறும் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’