வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 2 நவம்பர், 2010

மன்னார் பனை தென்னை வள உற்பத்தியாளர்கள் மற்றும் சங்க பணியாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடினார்.

மன்னார் மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பனை தென்னை வள உற்பத்தியாளர்கள் ஆகியோருடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
பேசாலையில் பனை தென்னை வள அபிவிருத்திச் சங்கத்தின் தலைமையக பணிமனை வளாகத்தில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் சங்க அங்கத்தவர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் தேவைகள் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார். குறிப்பாக பேசாலையில் சங்கத்தினால் இரண்டு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விநாகிரி உற்பத்தி தொழிற்சாலை செயலிழந்து போனமைக்கான காரணங்கள் விரிவாக ஆராயப்பட்டதுடன் அதனை மீண்டும் இயக்குவதற்குரிய வழிவகைகளும் ஆராயப்பட்டன. மேலும் மாவட்டத்தில் உள்ளுர் உற்பத்திகளின் சந்தை வாய்ப்புக்களை அதிகரிக்கும் நோக்குடன் போத்தலில் அடைக்கப்பட்ட கள் உற்பத்தி ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மாவட்டத்தில் பெருமளவு தென்னை மரங்கள் காணப்படும் நிலையில் வெளிமாவட்டத்திலிருந்து கிடுகுகள் எடுத்துவரப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்ட நிலையில் உள்ளூரிலேயே கிடுகு உற்பத்தியை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பனை மர நடுகை குறித்து வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த கால யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் அழிக்கப்பட்ட பனை மரங்களுக்கு ஈடுசெய்யும் முகமாகவும் தரிசு நிலங்களைப் பயன்படுத்தும் முகமாகவும் பனை மரத்தின் வளங்களை முழுதாக பயன்படுத்தும் வகையிலும் பனைமர நடுகையின் அவசியத்தை வலியுறுத்தினார். இதற்குரிய சகல வழிவகைகளையும் ஆராய்ந்து உடனடியாகவே பனை மரநடுகையினை ஆரம்பிக்கும் படி அங்கு சமூகமளித்திருந்த பனை அபிவிருத்திச் சபை அதிகாரிகளுக்கும் சம்பந்தப்பட்ட ஏனையோருக்கும் பணிப்புரைகளை வழங்கினார்.

இக்கலந்துரையாடலின் கருத்துத் தெரிவித்த அமைச்சரவர்கள் கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும் தேசிய அருங்கலைக் கைப்பணி நிலையம் ஆகியவற்றின் ஊடாக பனை தென்னை வளங்கள்சார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோருக்கும் உற்பத்தியாளர்களுக்கும் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு தரம்மிக்க உள்ளுர் உற்பத்திகளை உருவாக்க தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விரைவிலேயே மன்னாருக்கு வரவழைத்து பயிற்சிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பனை தென்னை வள உற்பத்தியாளர்கள் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடாத்திய மேற்படி கலந்துரையாடலில் மன்னார் அரசாங்க அதிபர் நீக்களஸ்பிள்ளை மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மெல் வடமாகாண மதுவரித் திணைக்கள உதவி ஆணையாளர் கிறிஸ்டி ஜோசப் மன்னார் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் மங்கலதாஸ் ஆகியோரும் உடனிருந்து தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’