ஊடக அடக்கு முறையை விஸ்தரித்து மக்கள் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு விதித்துள்ள தற்போதைய சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பொது மக்களை ஓரணியில் திரட்டும் நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கியுள்ளது. இதற்காக 1977களில் ஜே. ஆர். ஜெயவர்த்தன கையாண்ட யுக்தியை யே தற்போது எமது கட்சி பின்பற்றி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முதற் கடமை நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதே ஆகும். எனவே இந்த கடமையை நாட்டு மக்களுக்காக மிகவும் பொறுப்புடன் செய்து முடிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
"கிராமத்திற்கான பயணம்' என்ற தொனிப் பொருளில் ஐ.தே.க. முன்னெடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கை நேற்று முன்தினம் ஹொரணை பிரதேசத்தில் நடைபெற்றது. எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
இவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள வாழ்வாதார பிரச்சினை மற்றும் ஏகாதிபத்தியவாதத்திற்கு எதிராக கடந்த ஜுலை மாதத்தின் பின் இதுவரையில் 82 ஆர்ப்பாட்டங்களும் பல எதிர்ப்பு நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுத்துள்ளோம். அதேபோன்று 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராகவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை சிறை வைக்கப்பட்டமைக்கு எதிராகவும் நாடு பூராகவும் போராட்டங்களை முன்னெடுத்தோம். 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராகவும் இராணுவ நீதிமன்றத்தின் தண்டனை அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் நாம் எழுப்பிய குரல்கள் இன்று நாட்டில் முக்கிய இடம்பிடித்துள்ளன. இது தொடர்பில் ஐ.தே.க. வின் இளைஞர் அணி நாடு பூராகவும் செயற்படுகின்றது. அத்தோடு எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை இலக்கு வைத்து பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
இதனடிப்படையில் குறுகிய காலத்தில் ஐ.தே.க.தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் பல அரசியல் முன் நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை விடுதலை செய்து கொள்வதற்காக பாரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதோடு சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக போராட்டத்தையும் தீவிரப்படுத்தியுள்ளோம்.
பிரதி தலைவர் கரு ஜயசூரியவின் தலைமையிலான "கிராமத்திற்கான பயணம்' தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விருப்பு வாக்கு அரசியலினால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பொது மக்களிடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு ஐ.தே.க. விற்கு மட்டுமல்ல அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கும் உள்ளது.
எனவே இதனை மாற்றியமைக்கவும் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும் 1977 களில் ஜே.ஆர். ஜயவர்தன கிராமிய மட்டத்திற்கு சென்று செயற்பட்டது போல் செயற்பட வேண்டும். இதன் மூலம் நாட்டில் இளைஞர், யுவதிகள் மற்றும் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி வளமான இலங்கை ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஐ.தே.க.வின் கிராமிய மட்டத்திலாக செயற்பாடுகளுக்கு அரசாங்கம் தற்போது பயந்துள்ளது. அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கும் சவால் ஏற்பட்டுள்ளது எனக் கூறினார். _
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’