மன்னார் மேற்கு பனை தென்னை வள கூட்டுறவு அபிவிருத்திச் சங்கத்தினால் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி சபையின் அனுசரணையுடன் பேசாலையில் அமைக்கப்பட்ட இயற்கை பனம் வினாகிரி தொழிற்சாலையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
சுமார் இரண்டு கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட மேற்படி வினாகிரி தொழிற்சாலையானது பாரிய அளவில் வினாகிரியை உற்பத்தி செய்தபோதும் தற்சமயம் செயற்படாமல் முடங்கியுள்ளது. சரியான திட்டமிடல் இன்றி உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் உற்பத்தி செய்யப்பட்ட பெருமளவு வினாகிரி அழிக்கப்பட்டதாக தெரிவித்த மன்னார் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் மங்கலதாஸ் சந்தைப்படுத்தும் போது பெரிய கொள்கலன்களில் பொதி செய்தமை தென்பகுதி தரத்திற்கு ஈடான வகையில் உற்பத்தியை மேற்கொள்ளாமை சரியான சந்தைப்படுத்தலை திட்டமிடாமை போன்ற காரணங்களை தெரிவித்தார்.
தொழிற்சாலையினை பார்வையிட்ட நிலையிலும் உற்பத்தி முடக்கத்திற்கான காரணங்களை கண்டறிந்த நிலையிலும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீண்டும் இத்தொழிற்சாலை சரியான திட்டமிடலுடன் முறையாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சுயதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையிலும் அதன் கீழ் கைத்தொழில் அபிவிருத்தி சபை செயற்படும் நிலையில் உரிய உபகரணங்களையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு ஏற்றவகையில் தாம் அதிகாரிகள் குழுவொன்றை அனுப்பி மீண்டும் தொழிற்சாலை செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உறுதியளித்தார்.
பேசாலை இயற்கை பனம் வினாகிரி தொழிற்சாலையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்ட சமயம் மன்னார் அரசாங்க அதிபர் நீக்களஸ்பிள்ளை மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மெல் வடமாகாண மதுவரித் திணைக்கள உதவி ஆணையாளர் கிறிஸ்டி ஜோசப் மன்னார் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் மங்கலதாஸ் ஆகியோரும் உடனிருந்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’