இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழ் சமூகத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டு வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியன தொடர்பில் முக்கிய கவனம் எடுத்து அவைத் தொடர்பான வேலைத் திட்டங்களை இந்திய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என்று இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக்.கே.காந்தா தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கேற்ப இந்திய தூதரகத்தினால் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் நலன் கருதி மினிபஸ் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பஸ்ஸை உத்தியோகப்பூர்வமாக பாடசாலைக்குக் கையளிக்கும் நிகழ்வு இன்று 7 ஆம் திகதி தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில்; இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே இலங்கைக்கான இந்திய தூதுவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார், இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் அரசியற்பிரிவு முதன்மைச் செயலாளர் ஸ்ரீவஸ்தா, தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் திலக்ராஜ்,தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப்,தலவாக்கலை த.ம.வித்தியாலய அதிபர் கிருஷ்ணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கான இந்திய தூதுவர் தொடர்ந்து பேசுகையில்:
பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கேற்ப தலவாக்கலைத் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு இந்த பஸ்ஸினை வழங்குவதில் பெரும் மகிழ்;ச்சியடைகின்றேன். இந்திய அரசாங்கத்தினதும் இந்திய மக்களினதும் ஒரு சிறிய உதவியாகவே இதனை நாம் கருதுகின்றோம். இந்த பஸ்ஸானது இந்தப்பாடசாலையில் கல்விக்கற்கின்ற மாணவர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்குமென நம்பிக்கை கொள்கின்றேன். இந்தப் பஸ்ஸை பெற்றுக் கொள்ளுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு என்னை மெய்ச்சிலிர்க்க வைத்துள்ளது. என்னை உற்சாகமாக வரவேற்ற அனைவருக்கும் இந்தத்தருணத்தில் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்திய அரசாங்கம் இலங்கையிலுள்ள பல்வேறு அமைப்புகளுக்கு இதுவரை 55 பஸ்களை வழங்கியுள்ளது. இந்தியாவும் இலங்கையும் மிகவும் நட்புறவான நாடுகளாகும். அத்தோடு இந்த இரு நாட்டு மக்கள் மத்தியில் பல்வேறு உறவுகள் உள்ளன. இந்த நிலையில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களான பெருந்தோட்ட மக்களிடத்தில் இந்திய அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருகின்றது.
இந்த மக்களுக்குப் பல்வேறு தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமலிருப்பது குறித்து நாம் நன்கு அறிந்துள்ளோம். நான் இலங்கைக்கான இந்திய தூதராக பொறுப்பேற்ற வேளையில் மத்திய மாகாணத்திற்கு விஜயம் செய்த போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரத்தின் அழைப்புக்கேற்ப நுவரெலியா பகுதியிலுள்ள தோட்டப் பகுதிகளுக்கு விஜயம் செய்து அந்த மக்களின் தேவைப்பாடுகள் குறித்து அறிந்து கொண்டேன். இந்த நிலையில் இந்த மக்களின் வீடமைப்பு, சுகாதாரம், கல்வி ஆகியன தொடர்பில் வேலைத் திட்டங்களை முன்வைத்து அவற்றினை மேற்கொண்டு வருகின்றோம். இதனடிப்படையில் இந்திய - இலங்கை அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின் அடிப்படையில் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. இந்த வீடுகளில் 5 ஆயிரம் வீடுகள் மத்திய மாகாணத்திலுள்ள பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
அத்துடன் ஹட்டன், டிக்கோயா, கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையை 150 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தும் பணிகளை எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் இந்திய அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. மேலும் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பெருந்தோட்டப்பகுதி மாணவர்களின் உயர்க்கல்விக்காக இந்திய அரசாங்கம் புலமைப்பரிசில் திட்டமொன்றினையும் இன்னும் ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளது. பெருந்தோட்டப்பகுதி மக்களின் வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் தொடர்பிலான இந்திய அரசாங்கத்தின் இத்தகைய வேலைத் திட்டங்களை படிப்படியாக முன்னெடுப்பதில் அக்கறையுடன் செயற்படுவோம்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’