நீரா ராடியாவுக்கும் திமுகவைச் சேர்ந்த ராசாவுக்கும் கனிமொழிக்கும் பத்திரிக்கையாளர்கள் பர்கா தத், வீர் சங்கி ஆகியோருக்கும் இடையே 15 நிமிடங்கள் நடந்த உரையாடல் பதிவுகளே திமுக குறித்து இவ்வளவு சேற்றை வாரி இரைத்திருக்கிறது என்றால், 500 மணி நேர உரையாடல் பதிவுகளில் இன்னும் என்னென்ன குப்பைகள் வெளிப்படும் என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும்,
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இந்த உரையாடல் பதிவுகளை வைத்து சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவைச் சேர்ந்த ராசாவால் நிகழ்த்தப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்த செய்திகளை கவனித்துக் கொண்டிருந்த அதே வேளையில், ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கியவர்களுக்கும், டாடா மற்றும் அம்பானி நிறுவனங்களின் தொடர்பு முகவரும், அரசியல் வியாபாரியும், அதிகார மையத்திடம் அதிக செல்வாக்கு பெற்றவருமான நீரா ராடியாவுக்கும் இடையே நடைபெற்ற முக்கியமான தொடர் உரையாடல் காட்சிகள் குறிப்பாக தமிழக மக்களால் அவ்வளவாக கவனிக்கப்படவில்லை.
நீரா ராடியாவின் தவறான போக்கை உணர்ந்த வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அப்பொழுதே அவரை கண்காணித்தன. மிகப் பெரிய நிறுவனங்களுக்கு சலுகைகள் செய்து, அதன் மூலம் சட்டவிரோதமான முறையில் அரசியல் வாதிகளுக்கு வரும் பணத்தின் பாதையை ஆராயும் முயற்சியில் ஈடுபட்டு, அதை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் நீரா ராடியாவின் தொலைபேசி மற்றும் கைபேசிகளின் உரையாடல்களை குறிப்பிட்ட சில நாட்களுக்கு வருமான வரித்துறை பதிவு செய்தது.
500 மணி நேரங்களுக்கும் மேலான தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இதில் 15 நிமிடங்களுக்கும் குறைவான உரையாடலைத் தான் ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.
இந்த உரையாடல் கருணாநிதி குடும்பத்தினரின் சுயரூபத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அம்பலப்படுத்தியுள்ளது.
தனக்கு சுற்றுச்சூழல் இலாகா வேண்டுமென்றும், இல்லையெனில் சுகாதாரம் அல்லது விமானப் போக்குவரத்து அல்லது சுற்றுலா மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இலாகா ஒதுக்கப்பட வேண்டுமென்றும் கருணாநிதியின் மகள் கனிமொழி கோரிக்கை விடுக்கிறார்.
ராசாவுக்கு தொலைத்தொடர்பு இலாகா அளிக்கப்பட வேண்டும் என்று ஆவேசமாக வாதாடுகிறார் கனிமொழி. அதே சமயத்தில், தனது உறவினரும், கருணாநிதியின் பேரனுமான தயாநிதி மாறனை இழிவுபடுத்தியும் பேசுகிறார்.
திமுகவின் பல்வேறு கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தர்ம சங்கடத்தையும், நிர்பந்தத்தையும் உண்டாக்கும் விதமாக, பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணிக்க திமுக திட்டமிட்டு இருப்பதாக டி.ஆர். பாலு ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது காங்கிரஸ் தலைமையை எரிச்சல் அடையச் செய்திருக்கிறது என்ற தகவல் மற்றொரு மூத்த பத்திரிகையாளர் பர்கா தத்தின் உரையாடலில் பதிவாகி இருக்கிறது.
தயாநிதி மாறனுக்கு அமைச்சர் பதவி அளிக்க கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்திருந்தபோதிலும், மாறனுக்கு ஆதரவாக மு.க. ஸ்டாலினும், முரசொலி மாறனின் சகோதரர் செல்வத்தின் மனைவி மு.க. செல்வியும் தீவிரமாக ஈடுபட்டது நீரா ராடியா- பத்திரிக்கையாளர் வீர் சங்வி இடையேயான உரையாடல் மூலம் வெளி வந்துள்ளது.
15 நிமிடங்கள் நடந்த உரையாடல் பதிவுகளே இவ்வளவு சேற்றை வாரி இரைத்திருக்கிறது என்றால், 500 மணி நேர உரையாடல் பதிவுகளில் இன்னும் என்னென்ன குப்பைகள் வெளிப்படும் என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
மத்திய அமைச்சராக நியமனம் செய்யப்படுவதற்கு தகுதி மற்றும் பொருத்தம் ஆகியவை ஒரு அளவுகோலே அல்ல என்பதை இந்தப்பதிவுகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
இந்த உரையாடல் பதிவுகள் எல்லாம் ஊடகங்கள் வசம் இருக்கின்றன. இவை அனைத்தும் எல்லா தேசிய தொலைக்காட்சிகளிலும், ஜெயா தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டன. இந்த உரையாடலின் பிரதி அனைத்து தேசிய பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டன. இவை வெளியிடப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும், இதில் தொடர்புடைய நபர் எவரும் இதற்கு ஆட்சேபணையோ அல்லது மறுப்போ தெரிவிக்கவில்லை.
எனவே, இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்றும், உண்மையைத்தவிர வேறு ஏதுமில்லை என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த உரையாடல் பதிவுகள் வருமான வரித் துறையின் வசம் உள்ளன. மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்க இயக்கத்திடமும் இந்த உரையாடல் பதிவுகள் உள்ளன. இந்த அமைப்புகள் எல்லாம் உண்மையிலேயே சுதந்திரமாக செயல்படுகிறது என்றால், பொது வாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதாக கூறிக்கொள்ளும் நபர்களை விசாரிப்பதில் எந்த நிர்பந்தமும் மேற்படி அமைப்புகளுக்கு இல்லையென்றால், பொது வாழ்வில் தூய்மை கடை பிடிக்கப்படுவதையும், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படுவதையும் ஆதரிப்பதில் மேற்படி அமைப்புகளுக்கு விருப்பம் உள்ளது என்றால், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய சட்டத்தின் கீழ் மேற்படி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் உண்மையான குணம் மற்றும் நடத்தை குறித்து மக்களுக்கு தெளிவாக தெரிய வேண்டும்.
இவர்களுடைய அரசியல் கணக்கினை முடிப்பதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தங்களுக்கு வாக்களித்த மக்களை பயன்படுத்தி, நாட்டைச் சுரண்டி, தங்களுடைய கருவூலத்தை நிரப்பிக் கொண்டவர்களுக்கு தக்கப் பாடம் கற்பிக்கும் வகையில் தமிழக மக்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’