பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அனுசரனையுடன் தேசிய அருங்கலைகள் பேரவையின் ஒழுங்கமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கைவிணை உற்பத்திகளுக்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வு நேற்று காலை முதல் மாலை வரை இடம் பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
சிற்பம் ஓவியம் துணிச்சாயம் மற்றும் பணை தென்னை சார்ந்த பொருட்களிளாலான பல்வேறு கைவினை உற்பத்திகளில் தெரிவு செய்யப்பட்டோரை கௌரவிக்கும் விதத்தில் தங்கம் வெண்கலம் வெள்ளிப் பதக்கங்களும் பணப் பரிசில்களும் வழங்கப்பட்டன.
மாலை நிகழ்வுக்கு பிரதமர் டீ.எம். ஜெயரட்ண அவர்கள் பிரதம விருந்தினராக வருகை தந்தபோது அவரை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பிரதி அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க அவர்களும் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவைத் தலைவர் புத்தி கீர்த்திசேன அமைச்சரின் ஆலோசகர் திருமதி. ஜெகராசசிங்கம் ஆகியோர் வரவேற்றனர்.
தேசிய அருங்கலைகள் பேரவைத் தலைவர் தலைமையில் நடைபெற்ற மண்டப நிகழ்வில் மங்களச் சுடர்களை பிரதம அதிதியும் ஏனைய அதிதிகளும் ஏற்றி வைத்தனர்.
நிகழ்வில் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதி அமைச்சர் கௌரவ வீரகுமார திஸாநாயக்க அவர்கள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஆகியோர் உரைகளை நிகழ்த்தியதுடன் பல்வேறு கைப்பணிப் பொருட்களை ஆக்கியோரில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகளையும் வழங்கி கௌரவித்தனர்.
கைப்பணிப் பொருட்களை ஆக்கியோரில் முதலிடங்களைப் பெற்றவர்களுக்கு பிரதம விருந்தினர் பிரதமர் டீ.எம். ஜெயரட்ன அவர்கள் விருதுகளை வழங்கியதுடன் சிறப்புரையையும் ஆற்றினார்.
நிறைவில் பிரதம விருந்தினருக்கு தேசிய அருங்கலைகள் பேரவை சார்பாக நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
சில்ப 2010 கண்காட்சியும் விற்பனையும் இவ்வாண்டு யூலை 22ம் திகதி முதல் 25ம் திகதி வரையான நாட்களில் கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மண்டபத்தில் நடைபெற்றிருந்ததும் இதில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான பனை அபிவிருத்திச் சபை கைத்தொழில் அபிவிருத்திச் சபை தேசிய வடிவமைப்புச் சபை தேசிய கைப்பணிச் சபை உள்ளிட்டவற்றின் கைப்பணிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதும் அவற்றில் 19 வகையான பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்டோருக்கே நேற்று பதக்கங்களும் பரிசில்களும் விருதுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் அமைச்சின் துறைசார்ந்த அதிகாரிகள் கைபணிப் பொருள் படைப்பாளர்கள் கலைஞர்கள் சிற்பிகள் ஆர்வலர்கள் என பெருமளவானோர் கலந்துக் கொண்டிருந்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’