ஐக்கிய தேசிய முன்னணியில் ஜனநாயக மக்கள் முன்னணி; கட்சியின் வேட்பாளராக கடந்த பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட லெ.பாரதிதாசன் நேற்று தலவாக்கலையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமானது ஒரு முற்று முழுதான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
எமது கட்சியில் இருந்து தன்னிச்சையாக பிரிந்து அரசுடன் இணைந்துக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரை பின்பற்றி எமது கட்சியும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவில்லை. மாறாக எமது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியவருக்கு எதிராக நாம் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இந்நிலையில் கட்சி மாறிய எம்பி மலையகத்திலே ஜனநாயக மக்கள் காங்கிரஸ் என்ற புதிய தொழிற் சங்கத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த தொழிற் சங்கத்தின் செயற்பாட்டிற்கு நுவரெலியா மாவட்டத்தில் பாரதிதாசன் பாரிய தடையாக இருப்பார் என்ற காரணத்தினாலேயே பாரதிதாசன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வருட பெப்ரவரி மாதம் எமது கட்சியில் இணைந்து கொண்ட பாரதிதாசன் அதற்கு முன் மறைந்த அமைச்சர் சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணியில் நீண்ட கால உறுப்பினராகவும், அதற்கு முன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினராகவும் மலையக தொழிற்சங்க அரசியலில் பணியாற்றியுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற மத்திய மாகாணசபை தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் சார்பாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக வெற்றிலை சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் பாரதிதாசன் போட்டியிட்டும் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 2001ஆம் வருட கால கட்டத்தில் பாரதிதாசன் கிளிநொச்சிக்கு சென்று வந்துள்ளார் என்று கூறி இன்று அவர் திடீரென கைது செய்யப்படுவது திட்டவட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
எமது கட்சியில் இருந்து பிரிந்து சென்று அரசாங்கத்தில் இணைந்துகொண்டு புதிய ஒரு தொழிற்சங்கத்தை மலையகத்திலே ஆரம்பித்துள்ள குழுவினர்தான் அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்டு இத்தகைய பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
எமது கட்சி சட்டத்தை மதிக்கும் ஒரு ஜனநாயக கட்சியாகும். கடந்த காலங்களிலே தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நாம் குரல் கொடுத்துவந்தபோது, எனக்கு எதிராக பல்வேறு பயங்கரவாத குற்றச்சாட்டுகளை இனவாத சக்திகள் எழுப்பின. அவை அனைத்தையும் நாங்கள் வெற்றிகரமாக சாமளித்துள்ளதை போல இந்த சதி முயற்சிகளையும் நாங்கள் முறியடிப்போம். _
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’