கிடைக்கின்ற வாய்ப்புக்களை சரியான முறையில் பாவித்து அதன் மூலம் உரிய பலனைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ் அரச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு சர்வோதயம் நிறுவனம் நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் காசோலைகளை வழங்கும் நிகழ்வில் இன்று பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் சர்வோதய நிறுவனம் மேற்கொண்ட இந்த முயற்சி பாராட்டத்தக்கதும் வரவேற்கத்தக்கதுமாக உள்ளதுடன் இதன் மூலம் பயனைப் பெற்றுக் கொள்ளப் போகின்ற பயனாளிகளுக்கும் நல்லதொரு சந்தர்ப்பமாகவே இது அமைந்துள்ளது.
இவ்வாறு கிடைக்கப் பெறுகின்ற சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் சரியான முறையில் பயன்படுத்தி அதன் மூலம் பயனாளிகள் உயரிய பயன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.
இவ்வாறான வாய்ப்புகள் மூலம் எதிர்காலத்தில் எவரிடமும் கையேந்தாத சமூகமாக எமது மக்கள் வாழ வேண்டும் என்பதுடன் இங்கே வழங்கப்படுகின்ற நீர் இறைக்கும் இயந்திரங்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வைகயில் உரிய முறையில் பாவித்து வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்த வேண்டுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் சர்வோதயத்தின் தலைவர் ஆரியரட்ணவுக்கு இவ்வேளையில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் சர்வோதயம் மூலமாக இலங்கை மக்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் எதிர்காலத்திலும் இவ்வாறான உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் மக்கள் அவ்றறை தமது வளமான வாழ்வுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
முன்பதாக மண்டபத்தில் மங்கலச் சுடர்கள் அதிதிகளால் ஏற்றி வைக்கப்பட்டதுடன் சர்வோதய தேசிய செயற்திட்டப் பணிப்பாளர் பூலோகசிங்கம் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.
நிகழ்வில் வன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ் குடாநாட்டில் மீள் குடியமர்ந்துள்ள 05 பிரதேச செயலர் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கு பயிர்ச்செய்கைக்கான காணியை துப்பரவு செய்வதற்கென தலா 2000 ரூபாவும் நீர் இறைக்கும் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.
காசோலைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் ரூபினி வரதலிங்கம் சர்வோதய தேசிய செயற்திட்டப் பணிப்பாளர் பூலோகசிங்கம் சர்வோதய மாவட்ட இணைப்பாளர் ரேனுகா உள்ளிட்டோர் வழங்கி வைத்தனர்.
1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வோதய நிறுவனம் இச்செயற்திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’