அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோரது தலைமையில் வடமாகாணத்தில் மண் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பான உயர்மட்ட மாநாடு இன்றையதினம் இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ். செயலகத்தில் அரசாங்க அதிபர் பணிமனையில் இடம்பெற்ற மேற்படி மாநாட்டில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.சிவசுவாமி ஆளுநரின் செயலாளர் ரங்கராஜா யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.ஜே.எம்.சார்ள்ஸ் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திரு.வேதநாயகன் மன்னார் அரசாங்க அதிபர் திரு.நீக்களஸ்பிள்ளை யாழ். மாவட்ட விவசாய உதவிப்பணிப்பாளர் எஸ்.சிவகுமார் கமநலசேவைகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் பற்றிக் ரஞ்சன் கூட்டுறவு உதவி ஆணையாளர் அருந்தவநாதன் பனை அபிவிருத்தி சபை பொது முகாமையாளர் எம்.பி.லோகநாதன் ஆகியோர் பங்குகொண்டனர்.
இந்நிகழ்வில் வடமாகாண மண்வளம் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்த கலாநிதி வேதவியாசர் அவர்கள் இதன்மூலம் இடத்திற்கிடம் வேறுபட்டு காணப்படும் பல்வேறு மண்வகைகளை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கக்கூடியதான பயன்களை எடுத்துவிளக்கினார். மேலும் பழமரங்கள் உட்பட உரிய பயன்தரு மரங்கள் நடக்கூடிய மண்வகைகள் ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டு உச்ச பலனைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தார். மேலும் மண் ஆராய்ச்சி அபிவிருத்தி தொடர்பாக விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்டு திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் முக்கிய ஆய்வுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி அவர்கள் தகவல் வெளியிட்டார்.
நிகழ்வின் நிறைவாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிகாட்டிலின் கீழ் பனை அபிவிருத்திச் சபையினால் விற்பனைச் சந்தைக்கு அறிமுகஞ் செய்து வைக்கப்படவுள்ள புதிய மென்பானங்கள் பிரமுகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. இதன் பிரகாரம் பல்வகைப் பழங்களின் சாற்றுடன் பனஞ்சாறு கலந்த மென்பானமும் மாம்பழச் சாற்றுடன் பனஞ்சாறு கலந்த மென்பானமும் அறிமுகஞ் செய்து வைக்கப்படவுள்ளன.
மேற்படி மென்பானங்கள் ஏனைய மென்பானங்களைப் போலல்லாது கூடிய காலம் உரிய தன்மையுடன் பாதுகாத்து வைக்கக் கூடிய தரத்தினைக் கொண்டிருக்கும் அத்துடன் நீரிழிவு நோய் கொண்டவர்களுக்கு ஏற்ற வகையில் சீனித் தன்மையற்ற மென்பானங்களைத் தயாரிப்பது குறித்தும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’