யா ழ் மாநகரசபைக்குட்பட்ட மேற்குப்பகுதியான கொட்டடி முத்தமிழ் மற்றும் வில்லூன்றி பகுதிகளின் அபிவிருத்தி மற்றும் அங்கு மேற்கொள்ளப்படவுள்ள முதலீட்டு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று காலை அப்பகுதிகளுக்குச் சென்ற அமைச்சரவர்களுடன் யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ மற்றும் அதிகாரிகளும் உடனிருந்தனர். மேலும் அப்பகுதியில் முதலீட்டுத் திட்டங்களை ஆரம்பிக்கும் நோக்குடன் வருகை தந்திருந்த முதலீட்டு குழும ஆலோசகர் செல்வராஜா மற்றும் அப்பகுதி தரிசுநில உரிமையாளர் தேசபந்து ஆகியோரும் சமூகமளித்திருந்தனர். குறிப்பிட்ட பகுதியில் சுற்றுலா மையம் ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாக தெரிவித்த முதலீட்டுகுழும ஆலோசகர் அது தொடர்பான விபரங்களையும் தெரியப்படுத்தினார். யாழ்.மாநகர பிரதேசத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பகுதியான அவ்விடத்தில் சுற்றுலா மையம் ஆரம்பிக்கப்படுவதன் மூலம் தரிசு நிலமான அப்பகுதியானது மேம்பாடடைவதுடன் அதனை அண்டியுள்ள பிரதேச மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்வடையவிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
மேலும் முத்தமிழ் வில்லூன்றி பகுதிகளைச் சுற்றிப் பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடினார். அண்மையில் தமது வேண்டுகோளை ஏற்று முதல்வரும் பிரதிமுதல்வரும் தமது பகுதிக்கு புதிதாக வீதி அமைத்துத் தந்தமைக்காக அமைச்சரவர்களுக்கு அம்மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர். மேலும் புதிதாக அமைக்கப்படும் வீட்டுத்திட்ட நடவடிக்கைகளில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட தம்மையும் இணைத்துக் கொள்ளுமாறும் அத்துடன் வெள்ளநீர் தேங்காதவாறு வடிகாலமைப்பு முறைமையினை ஏற்படுத்தித் தருமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இது தொடர்பாக உரிய பணிப்புரைகளை வழங்கிய அமைச்சரவர்கள் இப்பகுதியில் முதலீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் நிலையில் பிரதேச மக்களின் வாழ்க்கைத்தரமும் நிச்சயம் மேம்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’