யாழ். மாநகரப்பகுதி உள்ளிட்ட வடபகுதியில் மேற்கொள்ளவேண்டிய மழைநீர்ப்பயன்பாடு ஊடான அபிவிருத்தி மற்றும் மேற்கொள்ள வேண்டிய பொருத்தமான வடிகாலமைப்பு செயற்றிட்டம் பற்றிய மாநாடு இன்றையதினம் (22) இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன).
யாழ். மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா டினேஷ் குணவர்த்தன யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்டின் உதயன் யாழ். மாநர பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ மாநகர உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் மங்கல வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டதுடன் யாழ். மாநகரசபை ஆணையாளர் மு. சரவணபவ நிகழ்விற்கு தலைமை தாங்கினார். யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவின் வரவேற்புரை செய்தியை ஆணையாளர் வாசித்ததைத் தொடர்ந்து நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதிப் பொதுமுகாமையாளர் டுலிப் குணவர்த்தன யாழ். மாநகரப்பகுதி உள்ளிட்ட வடபகுதியில் மேற்கொள்ளவேண்டிய மழைநீர்ப்பயன்பாடு ஊடான அபிவிருத்தி மற்றும் மேற்கொள்ளவேண்டிய பொருத்தமான வடிகாலமைப்பு செயற்றிட்டம் தொடர்பாக விரிவான விளக்கவுரையினை நிகழ்த்தினார்.
இதனையடுத்து பிரதான உரையினை நிகழ்த்திய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் டினேஷ் குணவர்த்தன அவர்கள் வடபகுதியிலேயே அபிவிருத்தியின் மத்திய நிலையமாக யாழ். மாநகரம் விளங்குவதாக தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சரவர்கள் யாழ்ப்பாண மக்களுக்கு சுத்தமான குடிநீரும் பொருத்தமான வடிகாலமைப்புத் திட்டமும் நிச்சயம் ஏற்படுத்தப்படும் என உறுதியளித்தார். கடந்தகாலத்தில் நகர அபிவிருத்தி திட்டங்களில் யாழ். மாநகரின் செயற்பாடுகளே இதற்கு நல்லதோர் முன்னுதாரணம் எனக்குறிப்பிட்டார். மேலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இடைவிடாத உழைப்பும் தூரநோக்கு சிந்தனையும் அபிவிருத்திக்கு பக்கபலமாக விளங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் மற்றுமொர் நிகழ்வாக மழைநீர் சேகரிப்பு தொடர்பான விரிவாக்க ஆவணங்கள் அமைச்சர் டினேஷ் குணவர்த்தன அவர்களினால் நகர அபிவிருத்தி அதிகார சபையின் யாழ். பிராந்திய திட்டமிடல் பணிப்பாளர் கவிதா ஜீவகன் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ். மாவட்ட பொது முகாமையாளர் ஜெயச்சந்திரன் வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தான செயலாளர் ஆகியோருக்கு வழங்கிவைத்தார். தொடர்ந்து பிரபல கல்விமானான நடனசபாபதி அவர்கள் யாழ். மாவட்ட நீர் பயன்பாடு தொடர்பான தனது ஆய்வுக்கட்டுரையினை அமைச்சர் டினேஷ் குணவர்த்தனவிடம் கையளித்தார். நிகழ்வின் இறுதியில் யாழ். மாநகர உறுப்பினர் எம். மங்களநேசன் நன்றி தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’