இந்தியாவின் புதுடெல்லி நகரத்தில் இம்மாதம் 29ம் திகதி முதல் நவம்பர் 11ம் திகதி வரை சில்ப சிறீலங்கா கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை நடைபெறவுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இந்தியாவிலுள்ள இலங்கை தூதரக அலுவலகம் இந்திய கைப்பணிப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகம் மற்றும் இலங்கை உல்லாசத்துறை மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் தேசிய அருங்கலைகள் பேரவை இந்தக் கண்காட்சி மற்றும் விற்பனை சந்தையை ஏற்பாடு செய்துள்ளது.
புதுடெல்லி (டெல்லி ஹாட்) கைப்பணிப் பொருட்கள் விற்பனை மத்திய நிலையத்தில் நடைபெறுகின்ற இக்காண்காட்சி மற்றும் விற்பனைச் சந்தையில் இலங்கையின் பல்வேறு துறைசார்ந்த கைப்பணிப்பொருள் உற்பத்தி கலைஞர்கள் 11 பேர் கலந்து கொள்கின்றனர்.
கலைஞர்களை வழியனுப்பி வைக்கும் முகமாக இன்றைய தினம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் கொழும்பு அமைச்சு அலுவலகத்தில் விசேட வைபவம் ஒன்று இடம்பெற்றது.
இதன் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் பாரம்பரிய கலாசார விழுமியங்களை பிரதி பலிக்கும் கைப்பணிப் பொருட்களின் ஊடாக இரு நாடுகளினதும் உறவுப் பாலத்தை நாம் வளமுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டுமென்றும் இச்சந்தர்ப்பத்தை மிகவும் சரியாகப் பயன்படுத்தி எமது கலைஞர்கள் மேம்பாடு அடைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் தேசிய அருங்கலைகள் பேரவையும் தேசிய வடிவமைப்புச் சபையும் இணக்கப்பாடுகளுடன் தத்தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வழிவகைகள் தன்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மக்களுக்கு காலத்திற்குத் தேவையான சிறந்த வடிவமைப்புக்களையும் கைப்பணிப் பொருட்களையும் உருவாக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் இவ்வாறான நிகழ்வுக்கான ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ள தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் புத்தி கீர்த்திசேனவுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
ஜனாதிபதி அவர்கள் பாரம்பரிய கைப்பணிப் பொருட்கள் தொடர்பில் மிகுந்த ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் இருப்பதால் இத்துறைசார்ந்த பல்வேறு துறைகளை பல வழிகளிலும் அவரிடமிருந்து பெற்று இத்துறையை சிறந்த மேம்படுத்த இயலும் என்றும் அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
இவ்வைபவத்தின் போது டெல்லி ஹாட் கண்காட்சி மற்றும் விற்பனைச் சந்தையில் கலந்து கொள்ளச் செல்லும் 11 கலைஞர்களுக்கான விமான டிக்கட்டுக்களை அமைச்சர் அவர்கள் வழங்கி வைத்தார்.
இவ்வைபவத்தில் அமைச்சின் செயலாளர் அமைச்சரின் ஆலோசகர் உட்பட அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’