பிரபல இந்திய எழுத்தாளரும் 'புக்கர்' பரிசு பெற்றவருமான அருந்ததி ரோய் விமர்சித்து பேசியதில் குற்றம் எதுவும் இல்லை என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்
.கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட அவர், காஷ்மீரானது இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதியல்லவெனவும் இந்திய அரசை விமர்சித்தும் கருத்து தெரிவித்திருந்தார். இக்கருத்தானது பாரிய சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.
அருந்ததி ரோய் விமர்சனம் தொடர்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவிக்கையில் :
காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ரோயின் குரலை முடக்க முயற்சி செய்யும் மத்திய அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.
காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ரோயின் குரலை நெறிக்க முயற்சி செய்யும் மத்திய அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம். பா.ஜ.க.வை திருப்திப்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசு இப்படி செயல்படுவது வெட்கக் கேடு. காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகின்றனர் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் காஷ்மீருக்கு சென்ற அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவில் நானும் இடம் பெற்று, காஷ்மீரின் நிலைமையை நேரில் கண்டறிந்தேன். `இந்திய ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்" என்று அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் எங்களிடம் வெளிப்படையாகவே தெரிவித்தனர்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சோனியா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நடத்திய 2 கூட்டங்களில், காஷ்மீர் மக்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்பதையும், அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள அதிகாரச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்தினேன்.
காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ரோய் பேசியதில் குற்றம் எதுவுமில்லை. யாரையும் தூண்டுவது போலவும் அவர் பேசவில்லை. காஷ்மீர் மக்கள் மற்றும் ஜனநாயக நாட்டமுள்ளவர்களின் எண்ணத்தின் எதிரொலிதான் அவரது கருத்தில் பிரதிபலிக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் இருந்த மெளனத்தை உடைத்த அருந்ததி ரோயை நான் பாராட்டுகிறேன். அவருக்கு இந்த விவகாரத்தில் முழு ஆதரவு அளிக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’