அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள் பணிகளில் ஏற்படும் தடைகள் யாவும் நிச்சயம் நீக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
4ம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணத்தில் அமையப்பெற்றுள்ள அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தில் இன்று நடைபெற்ற தொழில்சார் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் நீண்டகாலமாக மக்களுக்கான பணிகளை செம்மையாகச் செய்து வருவதுடன் சரியான வழியில் பயணித்து வருகின்றமையும் பாராட்டுக்குரியது.
இந்நிலையில் எதிர்காலத்தில் மக்களுக்கான சேவைகளைச் செய்வதில் இந் நிறுவனத்திற்கு தடைகள் இடர்பாடுகள் ஏதேனும் இருப்பின் நிச்சயம் அவை கவனத்தில் கொள்ளப்பட்டு அத்தடைகள் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிகளை 1977ல் ஆரம்பித்து வைத்தவர் எனது தந்தையாரான கே.சி. நித்தியானந்தா என்பது மட்டுமல்லாமல் ஆரம்பகால உறுப்பினர்களில் நானும் ஒருவனாக இருந்தேன் என்பதுடன் இற்றைக்கு 33 வருடங்களாக இந்நிறுவனம் தனது பணிகளை திறம்படச் செய்து வருகின்றமை பாராட்டத்தக்கது.
தற்போதைய தலைவர் பேராசிரியர் சிவநாதனின் தலைமையின் கீழ் இந்நிறுவனத்தின் எதிர்காலப் பணிகளுக்கு தனது ஒத்துழைப்பும் ஆதரவும் என்றென்றும் இருக்குமெனவும் இதன் பணிகள் மென்மேலும் சிறப்பாக விளங்க வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்வு மண்டபத்தில் பேராசிரியர் சிவநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மங்கல விளக்கினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் மாவட்ட ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன நல்லூர் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தித் திட்ட உதவிப் பணிப்பாளர் சுரேந்திரன் உள்ளிட்டோர் ஏற்றி வைத்தனர்.
இந்நிகழ்வில் நல்லூர் சண்டிலிப்பாய் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுகளுக்குட்பட்ட வன்னியிலிருந்து மீளக்குடியமர்ந்தோர் உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மீளக்குடியமர்ந்தோர் மற்றும் வறுமைக்கோட்டிக்குட்பட்ட 65 பயனாளிகளுக்கு அவர்களது சொந்த வருவாயை அதிகரிக்கும் நோக்கில் விவசாயம் மேசன் மரவேலை ஆகிய தொழில்சார் உபகரணங்கள் கால்நடை வளர்ப்புக்கான உதவி உள்ளிட்ட சிறுவியாபாரத்திற்கென பல்வேறு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’