இன்றைய மாணவர்கள் எதிர்காலத்தில் சமூகத்தில் நற்பிரஜைகளாகவும் சிறந்த கல்விமான்களாகவும் வளர வேண்டுமென்பதில் அதிக அக்கறையுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் செயற்பட்டு வருகின்றார் என 19வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி லெப்.கேணல் அல்வீர தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வடமராட்சி கிழக்கு உடுத்துறை நியூட்டன் அக்கடமியின் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றைய நாள் உடுத்துறை மாணவர்களுக்கு சிறப்பானதொரு நாள் எனவும் இங்குள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதிக அக்கறை செலுத்தி வருகின்றார் என்பதுடன் இன்றைய இளைய சமுதாயம் சமூகத்தில் நற்பிரஜைகளாகவும் சிறந்த கல்விமான்களாகவும் வளர வேண்டுமென்பதில் அவர் மிகுந்த கரிசனை காட்டி வருகின்றார் என்றும் தெரிவித்தார்.
ஒரு மனிதன் மனிதத்துவம் சார்ந்து பிறந்து விட்டால் பிறருக்காக உதவி செய்து வாழ்கின்ற போதே அது முழுமை பெறுகின்றது. அந்த எண்ணம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் இருப்பது கண்டும் மனம் நிறைவடைகிறோம் என்றும் அல்வீர மேலும் தெரிவித்துள்ளார்.
முன்பதாக சுடர்களை விருந்தினர்கள் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து பெயர்ப்பலகையினை திரை நீக்கம் செய்ததுடன் வகுப்பறையினையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்தார்.
கடந்த 20.03.2010ம் திகதி அன்று குடத்தனைப் பகுதியில் நியூட்டன் அக்கடமி திறந்து வைக்கப்பட்டு அதன் கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று உடுத்துறைப் பகுதியிலும் நியூட்டன் அக்கடமி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச மாலை நேரக் கல்வி போதிக்கப்படுவதுடன் இலவசமாக பால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுவதுடன் விளையாட்டுத் திடலும் ஏற்படுத்தித் தரப்படுமென்றும் மாணவர்கள் இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார்.
அமைச்சர் அவர்கள் சிறார்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கியதுடன் மாணவர்களும் பெற்றோர்களும் இந்த இலவச மாலை நேரக் கல்வியை ஒழுங்கமைத்து தந்த அமைச்சர் அவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந் நிகழ்வில் ஈ.பி.டி.பி. வடமராட்சி அமைப்பாளர் சிறிரங்கேஸ்வரன் மக்கள் தொடர்பாளர் சதீஸ் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் அவர்கள் உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழக மைதானத்தை பார்வையிட்டதுடன் வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
கோரிக்கைகள் தொடர்பில் பதிலளித்த அமைச்சர் அவர்கள் விளையாட்டு உபகரணங்களை தந்துதவுவதாக உறுதியளித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’