பளை பிரதேச செயலர் பிரிவிலுள்ள இயக்கச்சி முகாவில் கோவில்வயல் ஆகிய பிரிவுகளில் விரைவில் மீள்குடியேற்றம் நடைபெறவுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று (3) பளை பிரதேச செயலர் பிரிவு ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
பளை பிரதேசத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்களும் பற்றி இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டன. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் பிரதேசத்தின் உட்கட்டுமானப் பணிகள் பற்றியும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
யுத்தத்தினால் மிகவும் பாதிப்படைந்த பிரதேசமாக பளைப் பிரதேச செயலர் பிரிவு உள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் மீண்டும் இந்தப் பிரதேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் முழு வீச்சுடன் அனைவரும் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பளைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகளைப் பற்றி விளக்கமளித்த பிரதேச செயலர் திரு முகுந்தன் காணியில்லாதோருக்கு காணி வழங்கும் பணியும் வீடமைப்புப் பணிக்கும் இன்று முக்கியமான தேவையாக உள்ளன எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கும் போது மீளக்குடியேறிய மக்களுக்கு மேலும் கூரைத் தகடுகளும் சீமெந்துப் பொதிகளும் வழங்கப்படவுள்ளது என்றும் கூறினார்.
இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் திணைக்களங்களின் தலைவர்கள் துறைசார்ந்த அதிகாரிகள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் பொதுமக்களின் பிரதிநிதிகள் கூட்டுறவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பொதுமக்களாலும் பொதுமக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளாலும் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்களைச் சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் பணிப்புரை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’