மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்வைக் கட்டியெழுப்பவும் யுத்தத்தினால் அழிந்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவும் அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (3) கண்டவளை பிரதேச செயலர் பிரிவின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தலைமையுரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்
யுத்தத்தினால் அழிவடைந்த பிரதேசங்களைக் கட்டியெழுப்ப வேண்டியது இன்று முக்கிய பணியாக இருக்கிறது. இந்தப் பணியை அர்ப்பணிப்புமிக்க பங்களிப்பைச் செய்வதன் மூலமே செய்து முடிக்க முடியும். இந்தப் பங்களிப்பில் அரசாங்க உயரதிகாரிகளும் திணைக்களங்களின் உத்தியோகத்தர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பொதுமக்களின் அமைப்புகளும் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.
இத்தகைய உயரிய உழைப்பின் மூலமே மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்ப முடியும். இதேவேளை போரினால் அழிந்த வீடுகளை மீளக்கட்டும் உதவித் திட்டங்களைப் பெறுவதற்கு எல்லோருக்கும் காணிப் பிரச்சினை ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்தக் காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது அரசியல் தலைமைத்துவம் இருக்கும் போதுதான் ஒரு மாவட்டத்தின் அபிவிருத்தி நிறைவாக இருக்கும். இப்போது அத்தகைய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. எனவே கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளும் மக்களின் பிரச்சினைக்கும் விரைவில் தீர்க்கப்பட்டு முழுமையடையும் என்றார்.
மேலும் கண்டாவளைப் பிரதேசத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றியும் மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் வீடமைப்பு காணி விவசாயம் மருத்துவம் கல்வி உள்ளிட்ட பல முக்கியமான விடயங்கள் பற்றி ஆராயப்பட்டது.
இதன்போது கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் திரு கோபால கிருஷ்ணன் சுகாதாரப் பணிப்பாளர் திலீபன் கமநல சேவைகள் திணைக்கள ஆணையாளர் தயாரூபன் கிளிநொச்சி மாவட்ட திட்டமிடற் பணிப்பாளர் மோகனரூபன் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் கிராம அலுவலர்கள் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் படை அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் காணிப் பிரச்சினை குடிநீர்ப் பிரச்சினை குளம் அமைத்தல் வீதி திருத்துதல் உள்ளிட்ட முக்கிய பல பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’