வடபகுதி மக்களின் மீள்வாழ்வுக்கு இந்தியா எப்போதும் உதவத் தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ் பொது நூலகத்தில் மாவட்டத்தைச் சார்ந்த துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் கல்விமான்கள் மதத்தலைவர்கள் புத்திஜீவிகள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் சுனாமிக்குப் பின்னதாக இப்போது 5 வருடங்களுக்குப் பின்னர் இங்கு வருகை தந்துள்ளேன். இந்தப் பயணத்தின் மூலம் நிச்சயமாக வடபகுதியில் முன்னேற்றகரமான பல நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்கவுள்ளது.
குறிப்பாக வீட்டுத் திட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விதத்தில் அதற்கான உள்ளீடுகளை வழங்கவும் குறிப்பாக கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விவசாயம் மீன்பிடி மற்றும் சுயதொழில் வாய்ப்புக்கள் மூலம் வடபகுதி மக்களுக்கு நிம்மதியான வாழ்வுக்கு வழியேற்படுத்தப்படும் அத்துடன் கல்வி சுகாதாரம் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் கருத்தில் எடுக்கப்படுவதுடன் குறிப்பாக வட பகுதி மக்களின் மறுவாழ்வுக்கு இந்தியா எப்போதும் உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவுச் செயலருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் உடனிருந்தனர்.
சந்திப்பின் நிறைவில் சமயத் தலைவர்களாலும் ஏனையோராலும் நிருபமா ராவ் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நிருபமராவுக்கு நினைவுப் பரிசொன்றை யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா வழங்கினார்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்த நிருபமராவ் தலைமையிலான குழுவினரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வரவேற்றார்.
யாழ்ப்பாணத்தில் மீள்குடியமர்ந்து வரும் மக்களில் ஒரு தொகுதியினருக்கு இந்திய வெளியுறவுச் செயலர் வீட்டுக்கான உள்ளீடுகள் சிலவற்றை வழங்கினார்.
இதேவேளை யாழ். அரச செயலகத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த உதவி அரச அதிபர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகளுடனும் இந்தியத் தூதுவர் கலந்துரையாடினார்.
இதன் போது மாவட்டத்தின் தற்போதைய நிலைப்பாடுகள் குறித்தும் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் குறித்தும் அரச அதிபர் எடுத்து விளக்கினார்.
யாழ் பொதுநூலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து நிருபமா ராவ் தலைமையிலான குழுவினர் நூலகத்திற்கு அண்மையாகவுள்ள கலாசார மண்டபம் அமைக்கப்பெறவுள்ள காணியையும் பார்வையிட்டார்.
இறுதியாக துரையப்பா விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்த நிருபமா ராவ் குழுவினரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடைகொடுத்து வழியனுப்பி வைத்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’