சகலரும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே எமது அரசியல் பலத்தை அதிகரிக்கலாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்
.இன்று பிற்பகல் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மக்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆரையம்பதி சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவர் நடராசா துஸாதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் ஆரையம்பதி பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம்,மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்பாளர் ரவீந்திரன்,உட்பட கிராம முக்கியஸ்த்தர்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதியமைச்சர்,
சகலரும் ஒன்று பட்டு எமது பலத்தை அதிகரிப்பதன் மூலமே எமது தனித்துவமான செயற்பாட்டை அதிகரிக்கலாம். ஆரையப்பதி மக்கள் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலமே அம்மக்களை சூழ்ந்துள்ள பிரச்சினையை எதிர்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
30 ஆண்டு காலமாக நாங்கள் பட்ட கஸ்டம், வேதனைகளில் இருந்து மீண்டும் தற்போது ஒரு நல்ல நிலைக்கு வந்துள்ளோம். எம்மிடம் தற்போது அரசியல் அதிகாரம் சகல அதிகாரங்களும் உள்ளன. நாம் மேலும் மேலும் இழப்புகளை எதிர்நோக்கக்கூடாது.
அதனை காப்பாற்றக்கூடிய சகல சட்டதிட்டங்களும் எம்மிடம் உள்ளன. அதனை பயன்படுத்துவதற்கு ஒரே ஒரு வழி கிராமத்து மக்களாகிய நீங்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
போராட்டம் மூலம் எவ்வளவு இழப்புகளை சந்தித்த நாங்கள் எங்களது மக்களை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என அதிலிருந்து வெளியேறிய நிலையில் எமது மக்கள் அடைந்துள்ள அபிவிருத்திகள் தொடர்பில் நீங்கள் தற்போது நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
இது ஆரம்பத்தில் எவருக்கும் விளங்கியிருக்காது. தற்போத இடம்பெற்றுவரும் அபிவிருத்திகளை நீங்களே பார்த்திருப்பீர்கள். பாடசாலை அபிவிருத்தி, சுகாதார அபிவிருத்தி, விவசாய அபிவிருத்தி,தொழில் விருத்தி எல்லாம் அதன் பின்னர் ஏற்பட்டதே. எனவே நீங்கள் அதனை நன்றாக விளங்கிக்கொள்ளவேண்டும்.
இன்று அரசாங்கம் பலமான நிலையில் உள்ளது நாம் அரசாங்கத்துடன் இணைந்திருந்தால் தான் எதனையும் சாதிக்கலாம்.இன்னும் சிறிது காலம் சென்றால் எதிர்கட்சியே இல்லாத நிலைதான் ஏற்படும். அந்தளவுக்கு அரசியல் காய்நகர்த்தல்கள் இடம்பெற்றுவருகின்றன.
எனவே இந்த காலத்தை பயன்படுத்தி நாம் ஒற்றுமையாக இணைந்து செயற்படுவோமானால் நாம் பலவற்றை இந்த அரசாங்கத்தில் சாதிக்கலாம்.
அதுமட்டுமன்றி இந்த கிராமத்துக்கு அரசியல் பிரச்சினைக்கு அப்பால் பல ஆரையம்பதி கிராமத்திலே பல பிரச்சினைகள் உள்ளன. அதில் எல்லைப் பிரச்சினையும் ஒன்று இதனை ஆரம்ப காலம் தொட்டோ இந்தப் பிரச்சினையில் நான் கடும் கவனமாக இருந்தவன், ஆரையம்பதி பிரதேசத்தில் இருந்து நிலங்கள் பறிபோவதை தடுப்பதில் கடும் கவனமாக இருந்தேன்.
தற்போதும் நாங்கள் இருக்கின்றபோதும் சட்டரீதியான நிலங்களை பறிக்க எங்களால் அனுமதிக்கமுடியாது. ஒரு வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி செல்வதை அனுமதிக்கமுடியாது. இது தொடர்பில் அமைச்சர் ஹிஸ்புல்லாவுடனும் கதைத்துள்ளேன். அவர்களும் வரமுடியாது அதேபோல் நீங்களும் செல்லமுடியாது. அது தொடர்பில் கடும் கவனமாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.
அரசியல் என்பது சந்தர்ப்பம். நாங்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசியல் செய்தால் அது கெட்டித்தனம். அதைவிடுத்து நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு வருவதை எதிர்த்துக் கொண்டிருந்தல் எமக்கு ஆவப்போவது எதுவும் இல்லை. அதனையே இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்றில் செய்துகொண்டிருக்கின்றனர்.
நாங்கள் போராட்டத்தை விட்டு வெளியேறியதே எமது மக்களை சந்தோசமாக வைத்திருக்கவேண்டும் என்பதற்காகவே. மீண்டும் எமது மக்கள் துன்ப நிலைக்கு செல்ல விடமாட்டோம். எனவே எங்களுக்குள்ள வாய்ப்பு, வளங்களை பயன்படுத்தி மக்களை சந்தோசமான நிலைக்கு கொண்டுவரவேண்டும்.இது தான் எங்களுடைய நோக்கம் என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’