அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட உத்தேச அரசில் அமைப்பு திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது
.குறித்த அரசியல் சாசனத் திருத்தங்களினால் நாட்டின் ஜனநாயகத்திற்கு குந்தகம் ஏற்படும் என மனுதாரர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கத்தின் அரசியல் சாசனத் திருத்தங்களை பரிசீலனை செய்யும் ஐவர் அடங்கிய நீதவான்கள் குழாமே இந்த மனுக்களையும் பரிசிலனை செய்கின்றது.
உச்ச நீதிமன்ற நீதவான்களான ஷிராணி பண்டாரநாயக்க, பீ.ஏ. ரத்நாயக்க, என்.ஸ்ரீபவன், கே.இமான் மற்றும் சுரேஸ் சந்திரா ஆகியோர் இந்த மனுக்களை விசாணை செய்கின்றனர்.
பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப் பெற்றாலும் மக்களின் அபிலாஷைகளை அறிந்து கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிறைவேற்று ஜனாதிபதியின் தவணைக் கால வரையறையை நீக்குதல் உள்ளிட்ட சில முக்கிய திருத்தங்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் இவை ஓர் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நாட்டை இட்டுச் செல்லக் கூடும் எனவும் மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதி ஆட்சி நிலவும் நாடுகளான சிம்பாப்வே, உகன்டா, கியூபா போன்ற நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுவிடக் கூடிய சாத்தியம் இருப்பதாக சிரேஸ்ட சட்டத்தரணி டாக்டர் ஜயம்பதி விக்ரமதுங்க நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முயற்சி நாட்டின் ஜனநாயகத்தை பாதிக்கக் கூடிய வகையில் அமையப் பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் உள்ளிட்ட ஏழு தரப்பினர் உத்தேச அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு எதிராக நீதிமன்றில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
17 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக மக்களின் இறைமையான்மையை உறுதிப்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் காணப்பட்ட போதிலும், தற்போதைய அரசியல் சாசனத் திருத்தத்தின் மூலம் அவையும் பறிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் சாசனத் திருத்தங்களின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட முடியாத போதிலும், பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அதிகாரம் காணப்படுகின்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் சாசனத் திருத்தங்களில் பாரிய தவறுகள் காணப்படுவதாக சிரேஸ்ட சட்டத்தரணி ஜே.சீ. வெலியமுன தெரிவித்துள்ளார்.
உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் சாசனத் திருத்தங்களின் மூலம் பாராளுமன்ற சிறப்புரிமை பாதிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’