ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் முதலாமாண்டு நினைவுநாள், மாநிலம் முழுவதும் நாளை மறுதினம் அரசு சார்பில் அனுசரிக்கப்படுகிறது
.இதற்கிடையே ஒய்.எஸ்.ஆரின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான ஜெகன்மோகன் ரெட்டி, கட்சி மேலிட உத்தரவை மீறி இதுவரை 3 கட்டமாக ஆறுதல் யாத்திரை நடத்தியுள்ளார். இந்த யாத்திரையின்போது தனது தந்தையின் மரணத்தை தாங்க முடியாமல் இறந்த தொண்டர்களின் குடும்பத்தினரை சந்தித்து நிதியுதவி அளித்து வருகிறார்.
திட்டமிட்டபடி 4வது கட்டமாக பிரகாசம் மாவட்டத்தில் வரும் 3ம் தேதி ஆறுதல் யாத்திரை தொடங்கப் போவதாக ஜெகன் அறிவித்துள்ளார்.
கட்சி மேலிட எச்சரிக்கையை மீறி அவர் மேற்கொண்ட ஆறுதல் யாத்திரையால் சோனியா கோபத்தில் உள்ளதாக தெரிகிறது.
கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி பிளவு உண்டாக்க முயலும் ஜெகனின் நடவடிக்கைக்கு செக் வைக்க அவர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும் மத்திய சட்ட அமைச்சருமான வீரப்பமொய்லி, டெல்லியில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆரின் மரணம் காங்கிரசுக்கு பேரிழப்பாகும். கட்சிக்காக தன்னையே அர்ப்பணித்து கொண்ட அவரது முதலாமாண்டு நினைவு நாளை அரசு சார்பில் அனுசரிக்க முடிவு செய்துள்ளோம்.
கட்சிக்கு ஒய்.எஸ்.ஆர். செய்த பல சேவைகளை மறக்க முடியாது. ஒய்.எஸ்.ஆரின் மரணத்தை தாங்க முடியாமல் இறந்த ஒவ்வொரு தொண்டரின் குடும்பத்துக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உத்தரவின்பேரில் 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தலைமையில், இறந்தவர்களின் பட்டியலை சேகரித்து உடனுக்குடன் அவர்களது குடும்பத்தினருக்கு நிதி அளிக்கப்படும்’’என்று தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கையை மீறி ஜெகன் மேற்கொள்ளும் ஆறுதல் யாத்திரைக்கு ‘செக்’ வைக்கவே சோனியா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இதனால், ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’