வடமராட்சி கடற்றொழில் சங்கங்கள் மற்றும் சமாசத்தின் வேண்டுகோளின் பேரில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றினை மேற்கொண்டார்
.ஏற்கனவே கடந்த செவ்வாய்க்கிழமை 14ம் திகதி சக்கோட்டை கடற்றொழில் சங்க பணிமனை மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாகவே இன்றையதினம் பொலிகண்டி மேற்கு செம்மீன் பல நோக்கு மண்டபத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. அமைச்சரவர்களின் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கடற்றொழில் நீரியல் திணைக்க உதவிப்பணிப்பாளர் தர்மலிங்கம் கடற்றொழில் சமாசத் தலைவர் எமிலியாம்பிள்ளை ஈ.பி.டி.பி வடமராட்சி அமைப்பாளர் சிறீரங்கேஸ்வரன் முன்னாள் ஹட்லிக் கல்லூரி அதிபர் சீறிபதி 524வது படையணி இராணுவக் கட்டளை அதிகாரி கேணல் திசாநாயக்க பிரதேச கடற்படை கட்டளை அதிகாரி லெப்டினன் கொமாண்டர் எஸ்.யு.ஜெயமினி பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருடன் வடமராட்சி மற்றும் வலிகாமம் வடக்கின் சகல கடற்றொழில் சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் இழுவைப்படகுப் பாவனை மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளின் பாவனை தொடர்பாக முக்கியமாக ஆராயப்பட்டதுடன் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. இதனடிப்படையில் அரசாங்கத்தின் நாடுதழுவிய ரீதியிலான கடற்றொழில் கொள்கையின் அடிப்படையில் இழுவைப்படகு மூலம் கடற்றொழில் மேற்கொள்வதையும் தடைசெய்யப்பட்ட விறாண்டி வலை நாய்வலை முரல் வலை மற்றும் டிஸ்கோ வலை தங்கூசி வலைகள் மூலம் மீன்பிடிப்பதை நிறுத்திக்கொள்வது என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் வடமராட்சிக் கடலில் பல்வேறு சங்கங்கள் தொழில் மேற்கொள்ளும் நிலையில் அவர்களுக்கிடையில் பிணக்குகள் ஏற்படும்போது அதனை சச்சரவாக்காது உடனடியாக சமாசத்தின் கவனத்திற்கு கொண்டுசென்று சுமுகமான தீர்வினைக்காண வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையினை அனைத்து கடற்றொழில் சங்க உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.
மேலும் இன்றைய கூட்டத்தில் நிறைவாக உரைநிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய கூட்டத்தின் பெறுபேறுகள் குறித்தும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆராய தொடர்ந்தும் கலந்தாலோசனைகள் அபிப்பிராயங்கள் பெறப்பட்டு மீண்டும் கூட்டம் நடாத்தப்படும் என உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’