வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 27 செப்டம்பர், 2010

சிங்கள தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள் ஒன்றுகூடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிய சிறப்புரை.

சிங்கள தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களது ஒன்றுகூடல் நிகழ்வும் புதிய நூல்கள் வெளியீட்டு விழாவும் இன்றைய தினம் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது புகைப்படம் இணைப்பு 
.இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இளைஞர் விவகார வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களும் தேசிய மொழிகள் மற்றும் இன ஒருமைப்பாட்டு அமைச்சர் எஸ்.பி.நாவின்ன அவர்களும் கலந்து கொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக பேராசிரியர் றோகன லக்ஸ்மன் பியதாச பேராசிரியர் சபா ஜெயராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிய உரை இங்கு முழுமையாகப் பிரசுரிக்கப்படுகின்றது.
சுதந்திரமான இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும்!
அவை மக்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டும்!!
எல்லோரும் இங்கு மானுடர்களே என்ற மன உணர்வோடு
இணைந்து வந்திருக்கும் உங்களுக்கு
வணக்கம்!
அஸ்ஸலாமு அழைக்கும்!!
ஆயு போவான்!!!
எழுத்தாளன் என்பவன் மானுட சமூகத்தின் உன்னத வழிகாட்டி!
தான் வாழுகின்ற சம கால சமூக மக்களின் ஈடேற்றத்திற்காக அர்ப்பண உணர்வோடு உழைக்க விரும்புபவனே உண்மையான எழுத்தாளன்.
தமிழ் முஸ்லிம் சிங்கள எழுத்தாளர்கள் என்று மூன்று சமூகம் சார்ந்த நீங்கள் அனைவரும் இலக்கியப்படைப்பாளிகள் என்ற ஒரே சமூக உணர்வோடு ஒன்று சேர்ந்து உழைப்பதற்கு முன் வந்திருப்பதே உங்களது உண்மைத் தன்மையையும் உறுதியையும் வெளிப்படுத்தி நிற்கிறது.
இலக்கியம் என்பது கலை உணர்வோடு மட்டும் சம்பந்தமான ஒரு விடயமல்ல.
கலை கலைக்காக அன்றி அது மக்களுக்காகவே படைக்கப்பட வேண்டும் என்ற உண்மையை நீங்கள் உணராதவர்களும் அல்லர்.
இலக்கியம் என்பது அவை படைக்கப்படுகின்ற காலச்சூழலில் வாழுகின்ற மக்களின் உணர்வுகளை படம் பிடித்து காட்டுகின்ற ஒரு காலக்கண்ணாடி.
சம கால சமூகத்தின் சமூக அரசியல் பொருளாதார நிலைமைகளை அடுத்து வரும் தொடர்ச்சியான சந்ததிகளுக்கும் அதன் உண்மைத்தன்மைகளை எடுத்து விளக்க வேண்டிய சமூகப்பொறுப்பானது இலக்கியப்படைப்பாளிகளுக்கு இருக்க வேண்டும்.
இதை உணர்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு இது குறித்து நான் எதையும் விபரமாக தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இருக்காது என நான் நம்புகின்றேன்.
மக்கள் அழும்போது அழுவதற்கும், எழும் போது எழுவதற்கும், மக்கள் சிரிக்கும் போது சிரிப்பதற்கும் அவலங்களில் இருந்து விடுபட்டு மக்கள் மீட்சி கண்டு ஆனந்த கூத்தாடும் போது சேர்ந்து ஆனந்த கூத்தாடுவதற்கும் ஏற்பவனே மக்கள் சமூக எழுத்தாளனாக கணிக்கப்படுகின்றான்.
எமது மக்கள் சுதந்திரமாக பேச வேண்டும். சுதந்திரமாக நடமாட வேண்டும் சுதந்திரமாக எழுத வேண்டும் சுதந்திரமாக தமது விருப்பங்களைத் தெரிவு செய்ய வேண்டும் சுதந்திரமான படைப்பிலக்கியங்களை படைக்கவும் வேண்டும், படிக்கவும் வேண்டும்.
இந்த அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காகவும்தான் நாம் போராடியும் வாதாடியும் வந்திருக்கின்றோம்.
தாம் சொல்வதை மட்டுமே சிந்திக்க வேண்டும் என்றும், தாம் சொல்வதை மட்டுமே எழுத வேண்டும் என்ற தான்தோன்றித்தனமான தனித்தலைமை வெறிக்கு எத்தனையோ கலை இலக்கியப் படைப்பாளிகள் பலியாகிப்போன கொடுமையான வரலாற்றின் வலிகளை எமது தேசம் கண்டு வந்திருக்கின்றது.
அந்த வலியும், வலியின் துயரமும் நான் அறியாதவன் அல்ல. எம்மோடு கூட இருந்து மக்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் படைப்பாளிகளாக வாழ்ந்து எமது மக்களுக்கு இலக்கிய வழி காட்டிகளாக இருந்த பலரை நாமும் இழந்திருக்கின்றோம்.
உங்கள் அனைவருக்கும் தெரிந்திருந்த றமேஸ் அற்புதராஜா சின்னபாலா பாலநடராஜா போன்ற கலை இலக்கியப் படைப்பாளிகளை நாமும் மனித குலத்தின் எதிரிகளிடம் பறிகொடுத்திருக்கின்றோம்.
ஆனாலும், இனி இங்கு துயரம் இல்லை, துன்பமும் இல்லை என்ற அளவிற்கு கருத்துக்களுக்கும் எழுத்தாளர்களின் பேனா முனைக்கும் சவாலாக இருந்த சாத்தான்கள் தாமாகவே தேடிய வழி முறையில் தாமே இல்லாதொழிந்து போய்விட்டார்கள்.
நல்லதொரு சூழல் இங்கு பிறந்திருக்கின்றது. சுதந்திரமான இலக்கியங்களை படைப்பதற்கான காலம் இங்கு கனிந்து வந்திருக்கின்றது. இவ்வாறானதொரு சுமூகமான சூழலை ஏற்படுத்தித் தந்திருக்கும் மாண்புமிகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்~ அவர்களுக்கு இந்த இடத்தில் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த சந்தர்ப்பத்தை நீங்கள் அனைவரும் பயன்படுத்தி எமது மக்களை வழி நடத்திச் செல்ல முடிந்த இலக்கியங்களை படைப்பதற்கு முன்வரவேண்டும்.
பழந்தமிழ் இலக்கியங்களில்ப் பல போரியல் வரலாற்றின் வீரங்களையும், காதல் உணர்வுகளையுமே பிரதானமாக வெளிக்கொண்டிருந்தன. அவ்வப்போது ஒவ்வொரு காலச்சூழலிலும் வாழ்ந்திருந்த மக்களின் மன உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க அவைகள் பெரும்பாலும் தவறி விட்டன.
அதன் தொடர்ச்சியாக கடந்த காலங்களிலும் தமிழ் இலக்கிய படைப்பாளிகள் என தம்மை அடையாளப்படுத்தியிருந்தவர்களில் பலர் வெறுமனே பக்கச்சார்பான போரியல் வரலாறுகளை மட்டுமே இலக்கியங்களாக படைத்திருந்தார்கள்.
ஆனாலும் அவர்கள் மக்களின் மன உணர்வுகளை சரியான முறையில் தமது இலக்கியங்களின் ஊடாக கொண்டு வந்திருக்கவில்லை என்பதை மிகவும் மனத்துயரங்களோடு இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
இலக்கியங்களில் அரசியல் இருக்க கூடாது என்ற கருத்துக்களும் சிலரால் முன்வைக்கப்படுகின்றன. இந்த கருத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
சிங்கள சகோதர கலை இலக்கியப் படைப்பாளிகளுக்கு ஒரு வரலாற்று கடமை உண்டு.
இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்கள் தங்களது தனித்துவங்களுடன் ஐக்கிய இலங்கைக்குள் சம உரிமை பெற்ற மக்களாக வாழ விரும்புகின்றார்கள் என்றும், இலங்கை தீவின் இறைமைக்கும் இன ஐக்கியத்திற்கும் தமிழ் மக்கள் எதிரானவர்கள் அல்லர் என்றும் தெரிவிப்பதுடன் தமது இலக்கிய படைப்புகளின் ஊடாக சிங்கள சகோதர கலை இலக்கியப் படைப்பாளிகள் இந்த கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதே அந்த வரலாற்று கடமையாகும்.
அதே போல் தமிழ் கலை இலக்கியப் படைப்பாளிகளும் சிங்கள சகோதர மக்களின் ஒத்திசைவான உணர்வுகளைப் புரிந்து கொண்டு. ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் தங்களது தனித்துவங்களுடன் சம உரிமை பெற்று வாழவே விரும்புகின்றார்கள் என்றும், தமிழ் மக்கள் சிங்கள சகோதர மக்களுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர் என்றும் தமது படைப்பிலக்கியங்களுக்கு ஊடாக வெளிப்படுத்த வேண்டும்.
இதே போல் முஸ்லிம் சகோதர எழுத்தளார்களும் புரிந்துணர்வோடும் இன மத சமூக ஐக்கிய உணர்வோடும் சமத்துவ உரிமையோடும் தமது படைப்பிலக்கியங்களை வெளிக்கொண்டு வருவார்கள் என நான் நம்புகின்றேன்.
ஆக மொத்தத்தில் இரு மொழிகளிலுமான கலை இலக்கியப் படைப்புக்கள் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுகளையும் நட்பு ரீதியிலான உணர்வுகளையும் ஐக்கியத்திற்கான நேரிய வழிகாட்டல்களையும் கொண்டிருத்தல் காலத்தின் கட்டாயமாகும் என்பதை நானிங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
உண்மைகள் ஒரு போதும் உறங்காது. அது என்றுமே விழித்திருக்கும். ஆனாலும் உண்மையின் மீது வீசப்படும் சேறடிப்புகளுக்கு எதிராக, எழுத்தாளர்கள் என்று தம்மை அடையாளப்படுத்தி கடந்த காலங்களிலும் சரி சமகாலத்திலும் சரி வன்முறைகளுக்கு தூபமிட்ட வக்கிர புத்தியுள்ளவர்களுக்கு எதிராக கலை இலக்கியப் படைப்பாளிகளான நீங்கள் உங்களது பேனாமுனையை திருப்ப வேண்டும் என்று நான் எமது மக்களின் சார்பாக மனிதாபிமான வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இன்றைய தினம் இந்தப் பயனுள்ள நிகழ்வினை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்களுக்கும் இதன் பின்னணியில் இருந்து உழைத்தவர்களுக்கும் நன்றி கூறி எனது வாழ்த்துக்களையும் தெரிவித்து இவ்வாறான நல்ல முயற்சிகள் தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன்.

நன்றி
வணக்கம்.










0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’