சட்டவிரோதமான முறையில் குழந்தையொன்றை தத்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை ஒழுங்கு செய்த போலியான ஹோமியோபதி வைத்தியர் ஒருவரிடம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
திருமண பந்தத்தில் ஈடுபடாத தம்பதியினர் கருக்கலைப்பு செய்வதற்காக குறித்த ஹோமியோபதி வைத்தியரை அணுகியபோது, கருக்கலைப்பு செய்ய வேண்டாம் என்றும், குழந்தையை பிரசவித்து இன்னொருவருக்கு தத்துக் கொடுக்கலாம் என்றும் குறித்த வைத்தியர் மேற்படி தம்பதிக்கு அறிவுரை வழங்கினார். அத்துடன், இவரது வைத்திய நிலையத்திற்கு அருகில் வாடகைக்கு வீடொன்றை எடுத்து தங்குமாறும் அந்தத் தம்பதியினரிடம், குறித்த வைத்தியர் மேலும் கூறினார்.
இதன் பின்னர், இந்தத் தம்பதிக்கு தங்குமிட வசதியை குறித்த வைத்தியர் வழங்கியிருந்ததுடன், குழந்தையும் பிரசவித்திருந்தது. இந்நிலையில், குழந்தையை தத்தெடுப்பவர்கள் எவராவது இருந்தால் கூறுமாறு வைத்தியசாலை பணியாளர்களிடம் குறித்த ஹோமியோபதி வைத்தியர் தெரிவித்திருந்தார்.
வெளிநாட்டிலுள்ள பெண்மணியொருவருக்கு குழந்தையொன்றை தத்தெடுக்க வேண்டியுள்ள நிலையில், அவரது சகோதரியை வைத்தியசாலைப் பணியாளர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். இத்தாலியில் தங்கியிருந்த குழந்தையை தத்தெடுக்கவுள்ள பெண்மணி, இலங்கைக்கு வந்திருந்ததுடன் குறித்த வைத்தியரையும், மேற்படி குழந்தையை பிரசவித்த தாயாரையும் சந்தித்து குழந்தையை சட்டவிரோதமாக தத்தெடுப்பதற்கான நடவடிக்கைகைகளில் ஈடுபட்டார்.
குறித்த குழந்தையை தத்தெடுக்கவுள்ள பெண்மணி ஒரு போத்தல் மதுபானமும் இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் அன்பளிப்பாக வழங்கியிருந்ததுடன், இத்தாலியில் தங்கியிருக்கும் தனது கணவர் நாடு திரும்பியதும் மேலும் கைம்மாறு செய்வதாகவும் வாக்குறுதியளித்தார்.
இதற்கிடையில், பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவரிடமிருந்து தமக்கு தொலைபேசி அழைப்பொன்று கிடைக்கப் பெற்றதாகவும் அதில் போலிச் சான்றிதழுடன் ஹோமியோபதி வைத்தியர் ஒருவர் செயற்பட்டு வருவதுடன், அவர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து,குறித்த ஹோமியோபதி வைத்தியரிடம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அந்தச் சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
ஹோமியோபதி ஆணைக்குழுவின் தலைவர் சந்தன வீரசேகரவிடம் குறித்த போலிச் சான்றிதழ் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த சான்றிதழ் போலியானது என்று நிரூபிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’