பாகிஸ்தானில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைப் பலிகொண்டும் 15 லட்சம் பேரைப் பாதித்தும் உள்ள கடுமையான வெள்ளப் பெருக்கு தொடர்பில் அந்நாட்டுக்கு உதவ சர்வதேச சமூகம் உறுதியளித்துள்ளது.
பாகிஸ்தானில் தற்சமயம் மழை நின்றுள்ளது என்றாலும் அந்நாட்டின் வடமேற்குப் பிராந்தியத்தில் பெரும் பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கத்தான் செய்கின்றன.
மோசமான பாதிப்புகள்
இந்த மிக மோசமான வெள்ளப்பெருக்கில் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மான்மையானோர் வீடு வாசல் இழந்து போக்கிடமின்றி ஏதும் உதவிகள் வராதா என்று ஏங்கிக் காத்திருக்கின்றனர்.
தங்களுடைய அனைத்து உடைமைகளையும் பறிகொடுக்க நேர்ந்த மக்கள் பலர் சாப்பாட்டுக்கூட வழியில்லாமல் திண்டாடுகின்றனர்.
மக்கள் குடிநீருக்காகப் பயன்படுத்திவந்த நீர் ஆதாரங்களில் வெள்ளச் சகதி நிரம்பிவிட, சுத்தமான குடிநீர் இல்லாத நிலையில், தொற்று நோய்கள் பரவும் அபாயமும் கவலைகளும் அதிகரித்துள்ளன.
இந்தப் பகுதியில் இதற்கு முன்னர் இந்த அளவுக்கு மழைப் பெய்ததாக பதிவுகளே இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த பயங்கர வெள்ளத்திலிருந்து மக்களை மீட்கும் பணிகளிலும் நிவாரணப் பணிகளிலும் முப்பதாயிரம் துருப்பினர் வரை ஈடுபடுத்தியுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் கூறுகிறது.
நிவாரண உதவிகள்
பாகிஸ்தானுக்கு வெள்ள நிவாரணமாக ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் வழங்க ஐக்கிய நாடுகள் சபை முன்வந்துள்ளது.
அமெரிக்காவும் தன் பங்கில் அவசர நிதியாக ஒரு கோடி டாலர்கள் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அமெரிக்காவின் உதவிப் பொருட்களும் சென்று சேர்ந்துள்ளன.
அமெரிக்க இராணுவத்தின் வழியாக தற்போது முதல்கட்டமாக அறுபத்து இரண்டாயிரம் பேருக்கான சமைத்த உணவுப் பொட்டலங்கள் பெஷாவர் சென்று சேர்ந்துள்ளன என்று அந்நகரில் உள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகர் கூறுகிறார்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பயன்படுத்துவதற்காக படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களையும் அமெரிக்கா தந்துதவ முன்வந்துள்ளது.
2005ல் காஷ்மீரில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்திலும் சரி, 2008ல் பலுசிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்திலும் சரி, பாதிப்புகள் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் தான் இருந்தன. ஆனால் இந்த வெள்ளப்பெருக்கோ ஒரே நேரத்தில் நான்கு வெவ்வேறு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’