யு யுத்த சூழ்நிலையில் யாழ்.மாவட்ட கூட்டுறவுச் சபை ஆற்றிய பங்கும் பணிகளும் பாராட்டுக்குரியவை என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார் புகைப்படம் இணைப்பு. .
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் 88 வது சர்வதேச கூட்டுறவாளர் தினவிழாவில் பிரதம விருந்தினராக இன்று (20) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் நிலவிய யுத்த சூழ்நிலையில் யாழ். மாவட்ட கூட்டுறவுச் சபை மக்களுக்கு சிறப்பான பணிகளைச் செய்திருந்தமை பாராட்டுக்குரியது. யாழ்.மாவட்ட கூட்டுறவுச் சபையானது ஒரு கால கட்டத்தில் ஏனைய கூட்டுறவுச் சபைகளையும் விட முதன்மையாகத் திகழ்ந்ததை யாரும் மறுப்பதற்கில்லை.
எனவே எதிர்காலத்திற்கேற்ற வகையில் கூட்டுறவுச் சபையின் அபிவிருத்தியையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு புதிய சட்டதிட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதுடன் முன்னரைப் போல் அதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராகவும் இருக்கின்றேன் என்றும் அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.
அத்தோடு எனது அமைச்சினூடாக குடாநாட்டில் பல்வேறு கைத்தொழிற் பேட்டைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை கூட்டுறவு சபையையும் கட்டியெழுப்பி அதன் மூலம் எதிர்காலத்தில் மக்கள் நலன்சார் விடயங்களில் மேலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
அத்துடன் வீரசிங்கம் மண்படம் சகல வசதிகளுடனும் நவீனமயப்படுத்தப்படவுள்ளதாகவும் அதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார்.
முன்பதாக தேசியக் கொடியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும், கூட்டுறவுக் கொடியினை இலங்கைத் தேசிய கூட்டுறவுச் சபைத் தலைவர் பந்து ரணவக்கவும் ஏற்றி வைத்தனர். மங்கலச் சுடர்கள் ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்.மாவட்ட கூட்டுறவுச் சபைத் தலைவர் இராஜாராம் தலைமையில் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வுகள் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சிறப்புரையை அடுத்து சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மாவட்டக் கூட்டுவுச் சபை அங்கத்தவர்கள் ஊழியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
பரிசில்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் தேசிய கூட்டுறவுச் சபைத் தலைவர் பந்து ரணவக்க உள்ளிட்டோரும் வழங்கி வைத்தனர்.
இந் நிகழ்வில் மாவட்டக் கூட்டுறவுச் சபைக்குட்பட்ட அனைத்து கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள் பொதுமுகாமையாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’