தென்மராட்சி அல்லாரையில் தும்பு சார்ந்த உற்பத்திக் கிராமத்தின் பொதுவசதிகள் மத்திய நிலையம் இன்றையதினம் (15) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மஹிந்த சிந்தனையின் கீழ் கிராமிய கைத்தொழில்கள் மற்றும் உற்பத்திக் கிராமங்களை அபிவிருத்திச் செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நடவடிக்கை காரணமாக இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் மேற்படி தும்பு உற்பத்தி சார்ந்த மத்திய நிலையம் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று பிற்பகல் அல்லாரை தும்பு உற்பத்தி கிராமத்தை வந்தடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்துச் செல்லப்பட்டதுடன் மங்கல விளக்கேற்றல் தேசியக்கொடியேற்றல் ஆகிய நிகழ்வுகளுடன் ஆரம்ப விழா இடம்பெற்றது.
தென்மராட்சி பிரதேச செயலாளர் திரு சிறினிவாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தும்பு உற்பத்தி மேற்கொள்ளும் நவீன இயந்திரங்களுடனான நிலையத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார். இதனைத்தொடர்ந்து தும்பு உற்பத்திக் கிராம வளாகத்தில் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. இங்கு அல்லைரை தும்பு உற்பத்திக் கிராம நிர்வாக உறுப்பினரும் முன்னாள் அதிபருமான திரு.கே.தம்பு அவர்கள் உரையாற்றுகையில் வழமையாக அமைச்சர்களைப் பொதுமக்கள் தேடிச்செல்லும் வழமையினை அறிந்துள்ளோம். ஆனால் கிராம மக்களைத் தேடிவந்து உதவிசெய்யும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை நாம் பெற்றுள்ளமை பெருமைக்குரிய விடயம் எனக்குறிப்பிட்டார்.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் முற்றுமுழுதான நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட மேற்படி தும்பு உற்பத்தி நிலையத்தினூடாக தென்னம்தும்பு தும்புத்தடி விளக்குமாறு உள்ளிட்ட பனை தென்னை வள உற்பத்திகளை மேற்கொள்ளமுடியும் என்பதுடன் பலருக்கு வேலைவாய்ப்பும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். குறிப்பாக புதிதாக பொருத்தப்பட்டுள்ள இயந்திர சாதனங்கள் மூலம் சுமார் ஆயிரம் பொச்சுமட்டைகளிலிருந்து நூறு கிலோ தென்னந்தும்பும் 250 கிலோ தும்புத்தூளும் பெற்றுக்கொள்ளமுடியும் என்பது மற்றுமோர் விடயமாகும். அத்துடன் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு மேற்படி துறையில் பயிற்சி வழங்குவதற்கென குறிப்பிட்ட காலத்திற்கு இரு பயிற்சியாளர்கள் கைத்தொழில் அபிவிருத்திசபையினால் அங்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென்மராட்சி பிரதேச செயலாளர் திரு சிறினிவாசன் தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாகப் பங்குகொண்ட இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அமைச்சின் செயலாளர் திரு.சிவஞானசோதி மேலதிக செயலாளர் திரு.அமரதுங்க கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பொதுமுகாமையாளர் திருமதி ஜஸ்மின் மன்னப்பெருமா அல்லாரை தும்பு உற்பத்திக் கிராம தலைவி செல்வி துஷாலினி அமைச்சு அதிகாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் பெருமளவு பொதுமக்களும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து அல்லாரைக்கிராம மக்களின் தேவைகள் வேண்டுகோள்கள் தொடர்பில் கோரிக்கைகளைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன் அடுத்தமுறை தான் இக்கிராமத்திற்கு விஜயம் மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரடியாகப் பேசி உரிய தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’