வடக்கில் சிவில் நிர்வாகத்தை படிப்படியாக பொலிஸாரிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. ஆனால், வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை முழுமையாக அகற்ற முடியாது. இராணுவ முகாம்கள் அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை போன்ற நாட்டின் ஏனைய பகுதிகளிலும் காணப்படுகின்றன. முக்கியமாக வன்னியில் காடு மற்றும் கடற் பகுதிகளுக்கு பாதுகாப்பு தேவைப்படுகின்றது என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்
.மேலும் வன்னியில் மக்களினதோ தனியாரினதோ காணிகளில் எக்காரணம் கொண்டும் இராணுவ முகாம்களையும் இராணுவ நிலையங்களையும் அமைக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை. அரசாங்க காணிகளிலேயே இராணுவ முகாம்களை மீளமைத்துவருகின்றோம். அதுவும் அரசாங்க கட்டடங்கள் உள்ள பகுதிகளிலும் இராணுவ நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் காலை 9.30 க்கு அமர்வு ஆரம்பமாகியது. ஆணைக்குழுவின் தலைவருடன் ஏனைய ஆறு உறுப்பினர்களும் அமர்வில் கலந்துகொண்டனர்.
பிற்பகல் நடைபெற்ற அமர்விலேயே பாதுகாப்பு செயலாளர் கலந்துகொண்டு சாட்சியமளித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:
"எந்தளவு பயங்கரமான பயங்கரவாத அமைப்பு ஒன்றை இலங்கை இராணுவம் தோற்கடித்துள்ளது என்பதனை இன்று அதிகமானோர் மறந்துவிட்டனர். புலிகள் எந்தளவுக்கு பலமாக இருந்தனர் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது. கடந்த 2005 ஆம் ஆண்டு நான் பாதுகாப்பு செயலாளராக பொறுப்பேற்றபோது வடக்கின் பல பகுதிகளிலும் கிழக்கின் பல பகுதிகளிலும் புலிகள் நிலைகொண்டிருந்தனர்.
30 ஆயிரம் உறுப்பினர்கள்
அப்போது புலிகள் அமைப்பில் 30 ஆயிரம் போராளிகள் காணப்பட்டனர். சிறுவர் போராளிகளும் காணப்பட்டனர். எங்கள் இராணுவத்தினரிடம் இருந்த அதேவகையான அனைத்து ஆயுதங்களும் அன்று புலிகளிடம் காணப்பட்டன. மேலும் தரைப்படை வான்படை கடற்படை என பல பிரிவுகள் இருந்தன. பல உபகரணங்களை வைத்திருந்தனர். தற்கொலை குண்டுதாரிகளையும் வைத்திருந்தனர்.
புலிகள் தமிழ் தலைவர்களையும் கொலை செய்தனர். அல்பிரட் துரையப்பா மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் உள்ளிட்ட அதிகளவான தமிழ் தலைவர்களையும் சிங்கள தலைவர்களையும் கொலை செய்தனர். சிவிலியன்களை அதிகளவில் கொலை செய்தனர். சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை கொலை செய்தனர். இதுதான் விடுதலை புலிகளின் பின்னணியாகவிருந்தது.
இந்நிலையிலேயே மனிதாபிமான நடவடிக்கைகளை இராணுவத்தின் உதவிகளுடன் செய்ய ஆரம்பித்தோம். அதாவது இதற்கு முன்னர் பல பெயர்களில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதனை மனிதாபிமான மீட்பின் அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். இதனை அவர் பாதுகாப்பு சபையில் தெளிவõக குறிப்பிட்டிருந்தார்.
மக்களை விடுவிப்பதற்கான மனிதாபிமான போராட்டத்தையே ஆரம்பித்தோம்.
அந்த வகையில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஆலோசனை சபை என்று ஒன்றை அமைத்தோம். கடந்த 2006 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 14 ஆம் திகதி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஆலோசனை சபையின் முதலாவது கூட்டம் நடந்தது.
புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு மருந்து மற்றும் உணவுப் பொருட்களை தொடர்ச்சியாக அனுப்பி வந்தோம். அது புலிகளின் கைகளுக்கும் செல்கின்றது என்று எங்களுக்கு தெரியும்.
மேலும் மக்களை மீட்டபோது புலிகளும் அவர்களுடன் வந்தனர். புலிகளையும் சிவிலியன்களையும் இனம் காண்பது மிகவும் சிரமமாக இருந்தது. இந்த மனிதாபிமான பணியின்போது இராணுவத்தரப்பில் ஆறாயிரம் பேர் பலியாகினர். 30 ஆயிரம் பேர் காயமடைந்தனர்.
மேலும் அரசாங்கம் யுத்த சூனிய வலயம் என்று ஒன்றை அறிமுகப்படுத்தியது. உலகில் இவ்வாறு செய்த நாடு இலங்கைதான். மக்களை யுத்த சூனிய வலயத்துக்கு வருமாறு அழைத்தோம். அதாவது இலங்கையின் மாதிரியாகவே இது அமைந்தது. இதன்மூலம் சிவிலியன் பாதிப்பு குறைவடைந்தது. எனினும் சிவிலியன்கள் யுத்த சூனிய வலயப் பகுதிக்கு வருவதை புலிகள் தடுத்தனர்.
கனரக ஆயுதங்களை தவிர்த்தோம்
அதேவேளை சிவிலயன்களுக்கான பாதிப்பை குறைக்கும் பொருட்டு அரசாங்க இராணுவம் கனரக ஆயுத பாவனையை நிறுத்தியது. வான் தாக்குதலையும் நிறுத்தினோம். அதன் மூலம் எங்கள் தரப்புக்கு பாரிய பாதிப்புகளும் சேதங்களும் ஏற்பட்டன. ஆனால் மக்களுக்காக இதனை செய்தோம். இவ்வாறு உலகில் எங்கும் நடைபெற்றிருக்காது.
இந்நிலையில் மீட்கப்பட்ட மக்கள் அனைவரும் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியில் தங்கவைக்கப்பட்டனர். இவ்வாறான நிலைமை ஒன்றை எதிர்கொள்ளவேண்டும் என்று ஏற்கனவே எமக்கு தெரிந்ததால் நாம் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தோம்.
மனிதாபிமான சட்டங்களை இராணுவத்தினருக்கு கற்பித்தோம்.
வான் தாக்குதல் தொடர்பில் விமர்சனங்கள் இருந்தன. ஆனால் விமானப் படை தளபதியின் அனுமதியுடன் இலக்குகள் இனம் காணப்பட்ட பின்னரே வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
பொது மக்கள் புலிகளிடம் இருந்து தப்பி வரும்போது அவர்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள உதவுமாறு இராணுவத்தினருக்கு ஆலோசனை வழங்கியிருந்தோம். மக்களை பாதுகாப்பாமாக மீட்கவேண்டும் என்ற காரணத்தினாலேயே அதிக காலம் எடுத்தது.
மேலும் இராணுவத்தினருக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவில்லை. அங்கு பணிபுரியும் இராணுவத்தினர் தங்குவதற்கே இருப்பிடங்கள் அமைக்கப்படுகின்றன.
புலிகள் தோற்கடிக்கப்பட்டதும் சுமார் 11 ஆயிரம் முன்னாள் போராளிகள் சரணடைந்தனர். அவர்களுக்கு தற்போது பல பிரிவுகளுக்கு உட்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது. இது தொடர்பில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
வன்னியில் தற்போது சிவில் நிர்வாகம் இடம்பெற்று வருகின்றது. அண்மையில் அமைச்சரவை கூட்டமும் அ“ங்கு நடைபெற்றது. நிர்வாக செயற்பாடுகளை படிப்படியாக பொலிஸாரிடம் கையளிக்க எதிர்பார்க்கின்றோம். எனினும் இராணுவத்தினரை அங்கிருந்து முழுமையாக வெளியேற்ற முடியாது.
புலிகளின் சர்வதேச வலையமைப்பு
மேலும் வன்னியின் கடற்பகுதி மற்றும் காட்டுப்பகுதிகளில் அதிகளவில் பாதுகாப்பு வழங்கவேண்டியுள்ளது. மீண்டும் ஒருமுறை பயங்கரவாத அமைப்பு ஒன்று உருவாவதற்கு இடமளிக்க முடியாது. காரணம் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னும் செயற்படுகின்றது. எனவே நாங்கள் கவனமாக இருக்கவேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகம் சிவிலியன்களை விடுவிக்குமாறு புலிகளுக்கு அதிளவில் அழுத்தம் கொடுத்திருக்கவேண்டும். ஆனால் சர்வதேச சமூகம் அரசாங்கம் மீதே அழுத்தங்களை பிரயோகித்தது. எனவே புலிகள் சர்வதேசத்துடன் தொடர்புகொண்டனர். முக்கியமாக மலேஷியாவில் இருந்த கே.பி. யுடன் தொடர்புகொண்டனர். சர்வதேசம் பாதுகாக்கும் என்று புலிகள் நம்பியிருந்தனர்.
மேலும் யுத்தம் முடிவடைந்த மறுநாளே வடக்கு கிழக்கில் குழுக்களிடம் காணப்படுகின்ற ஆயுதங்களை களையுமாறு பாதுகாப்பு தரப்புக்கு உத்தரவிட்டேன். அது அவ்வாறே நடந்தது.
நான் பதவியேற்றபோது புலிகள் 3000 தடவைகள் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறியிருந்தனர். போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு மீறல்கள் தொடர்பில் அறிக்கையிடல்களை மட்டுமே செய்து வந்தது. புலிகள் சமாதான பேச்சுவார்த்தைகளை தம்மைப் பலப்படுத்துவதற்காகவே பயன்படுத்தி வந்தனர்.
பிரபாகரன் சமாதான பேச்சுக்கு ஒருபோதும் தயாராகவில்லை. இறுதி நிமிடத்தில் கூட பிரபாகரனின் எண்ணம் மீண்டும் பழைய நிலைக்கு வருவதாகவே இருந்தது
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’