வடமராட்சி கடற்றொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான கடல்வான் ஆழமாக்கும் பணிகளை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்துவைத்து அத்திட்டம் செயற்படும் நிலையில் அதனைத் தொடர்ந்தும் மேற்கொள்ள மேலும் நிதியுதவி வழங்கியுள்ளார்.
கடல்வான் ஆழமாக்கும் மேற்படி விடயம் தொடர்பாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம் நேரடியாகவும் அமைச்சரவர்கள் வடமராட்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பங்களிலும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். வடமராட்சி வடக்கைச் சேர்ந்த பதினாறு கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளின் சார்பில் அமைச்சர் அவர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய வான் ஆழமாக்கல் புனரமைப்பு பணிகளுக்கென ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாவினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முதற்கட்டமாக மகேஸ்வரி நிதியத்தினூடாக வழங்கியிருந்தார். இதனைத்தொடர்ந்து வழங்கப்பட்ட மேற்படி நிதி மூலம் தொண்டமனாறு முதல் கற்கோவளம் வரையான கடலில் வான் ஆழமாக்கும் பணிகள் ஆரம்பித்த நிலையில் கடந்த மாதம் இருபதாம் திகதி தொண்டமனாறு பெரிய கடற்கரைப் பிரதேசத்திற்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெக்கோ இயந்திரத்தை தானே இயக்கி வான் ஆழமாக்கும் பணிகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.
தொண்டமனாறு கரையோரப்பிரதேசத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்ட கடல்வான் ஆழமாக்கும் பணிகள் தற்சமயம் வல்வெட்டித்துறை வரை பணிகள் நிறைவடைந்து பொலிகண்டி மேற்கில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் மகேஸ்வரி நிதியத்தினூடாக மேலும் ஐந்து லட்சம் ரூபாவினை இன்றையதினம் அமைச்சரவர்கள் கையளித்தார். இத்திட்டமானது பருத்தித்துறை தும்பளை கிழக்குவரை விஸ்தரிக்கப்படவுள்ளமை முக்கியவிடயமாகும். மேலும் வடமராட்சி கடற்றொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசத்தின் வேண்டுகோள்களுடன் இன்றையதினம் தம்மைச் சந்தித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்படி பணிகளின் பெறுபேறுகள் குறித்து ஆராய்ந்தார். கடல்வான் ஆழமாக்கும் பணிகளுடன் கடலரிப்பு தடுப்பணைகளை அமைத்தல் பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளை மேம்படுத்தி அம்மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடியதுடன் விரைவிலேயே அத்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்பதையும் தெரியப்படுத்தினார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடனான இன்றைய சந்திப்பில் வடமராட்சி ஈ.பி.டி.பி. அமைப்பாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் பிரதேச முக்கியஸ்தரும் ஓய்வுபெற்ற அதிபருமான சிறீபதி மாஸ்டர் வடமராட்சி கரையோரப்பகுதி பொறுப்பாளர் பொன்னுத்துரை தெய்வேந்திரம் கரவெட்டிப் பொறுப்பாளர் செந்தில்நாதன் மக்கள் சேவை நிலைய இயக்குனர் சதீஸ் ஆகியோர் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’