இந்திய அரசின் உதவியுடன் யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதுடன் பொறியியல் பீடத்தை உருவாக்குவதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்கா, யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்
.யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தார்.
இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்:
போர் அனர்த்தங்கள் காரணமாக யாழ்.குடாநாட்டு மாணவர்களின் உயர்கல்வி நிலை மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இனிவரும் காலங்களிலும் இவ்வாறு இருப்பதற்கு அனுமதி வழங்க முடியாது. ஏனைய பகுதிகளைப் போன்றே யாழ்ப்பாணத்து மாணவர்களும் உயர் கல்வியில் முன்னிலை வகிக்கவேண்டும். இதற்குத் தேவையான சகல வசதிகளையும் அரசுடன் இணைந்து உயர்கல்வி அமைச்சு மேற்கொள்ளும். யாழ். திருநெல்வேலியில் தற்போது இயங்கிவரும் விவசாயபீடத்தை கிளிநொச்சிக்கு மாற்றி இயங்கவைப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் அமைச்சு மேற்கொள்ளும். அத்துடன் விலங்கு வளர்ப்புக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். – என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், ஆசிரியர் சங்கத்தினர், ஊழியர்கள் ஆகியோரை அமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடினார்.
யாழ்.பல்கலைக் கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்கும் சென்று, குறைநிறைகளைக் கேட்டறிந்ததுடன் உயர்கல்வி அபிவிருத்திக்குத் தேவையான சகல உதவிகளையும் தான் மேற்கொள்வார் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படவுள்ள சுகாதார விஞ்ஞானக் கட்டடத்துக்கான அடிக்கல்லையும் அமைச்சர் நட்டுவைத்தார்.
நாளை யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள பரமேஸ்வராக் கல்லூரி ஸ்தாபகர் நினைவு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ள அமைச்சர், நாளை மறுதினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’