வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னர் வாழந்த சிங்கள மக்கள் தற்போது மீணடும் அப்பகுதிகளில் குடியேறுவதை தடுக்க முடியாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசர காலச்சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“வடக்கில் 1981 ஆம் ஆண்டு 12 ஆயிரம் சிங்கள மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். அவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். அவ்விடங்களில் அவர்கள் வாழந்ததற்கான ஆவணங்களுடன் வருவார்களேயானால் அவ்விடங்களில் அவர்களை குடியேற்றுவோம். இதனை யாரும் தடுக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
இது குறித்து தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது,
“வடக்கில் கிழக்கில் சிங்கள மக்களும் வாழ்ந்துள்ளனர். அவர்களிடம் அதற்கான காணி உறுதிப் பத்திரங்களும் உண்டு. யுத்த காலப் பகுதியில் அவர்கள் சொந்த இடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இந்த நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் மூவின மக்களும் வாழ்வதற்கான உரிமையுண்டு. கல்குடா போன்ற பிரதேசங்களில் சிங்கள மக்களும் முல்லை தீவில் முஸ்லிம் மக்களும் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் உண்டு.
ஆகவே காணி உறுதிப் பத்திரத்திரங்களுடன் வடக்கில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களுடன் வருவார்களேயானால் அங்கு அவர்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும். காணி உறுதிப் பத்திரங்கள் இன்றி வடக்கில் வாழ்ந்தோம் எனக் கூறுவதில் பயனில்லை.
இதனை தமிழ் மக்கள் இனவாத கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. அதேவேளை இது குடியேற்றம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’