வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

கூட்டமைப்பின் எதிர்ப்பு அரசியல் எவ்வளவு காலம் சென்றாலும் பலன் தரப்போவதில்லை

டைமுறைச் சாத்தியமான வழியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதையும் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் அன்றாடப் பிரச்சினைகளின் தீர்வுக்காகச் செயற்படுவதையும் நோக்கமாகக் கொண்ட தமிழ்க் கட்சிகளின் கூட்டே தமிழ்க் கட்சிகளின் அரங்கம். இவ்வாறான ஒரு கூட்டுச் செயற்பாடு இன்றைய நிலையில் மிகவும் அவசியமானதாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரங்கத்தில் இணைத்துக் கொள்வதற்காக அரங்கக் கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சி இதுவரையில் பலிக்கவில்லை. கூட்டமைப்பு அரங்கத்தின் அழைப்புக்கு முடிவு எதையும் கூறாமல் இழுத்தடிப்பதற்கான நோக்கத்தை அரங்கக் கட்சிகள் சரியாக விளங்கிக்கொண்டு செயலில் இறங்க வேண்டும்.
கூட்டமைப்பை இணைத்துக்கொள்ளும் முயற்சியிலேயே தமிழ்க் கட்சிகளின் அரங்கம் காலத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று கூட்டமைப்புத் தலைவர்கள் எதிர்பார்க்கின்றார்கள் போல் தெரிகின்றது. இது அரங்கம் செயலில் இறங்குவதை இயன்றளவு தடுப்பதற்கான தந்திரோபாயம். இந்தத் தந்திரோபாயத்துக்குப் பலியாகாமல் இருக்க வேண்டுமானால் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தாமதமின்றி அதன் வேலைத் திட்டத்தைத் தயாரித்துச் செயலில் இறங்க வேண்டும். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றில் அரங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும், அல்லது மக்களுக்கு முன்னால் மாற்று வேலைத்திட்டமொன்றை வைக்க வேண்டும்.

இனப்பிரச்சினைக்குச் சரியான தீர்வு எது என்பதில் கருத்து வேறுபாடு இருக்க வேண்டியதில்லை. ஒருவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு சிலர் இன்றும் தனிநாட்டு மாயைக்குள் சிக்கியிருக்கலாம். அது நடைமுறைச் சாத்தியமற்றது என்பது நிரூபணமாகிவிட்டது. ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்று வரும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துக்குமிடையே மாறுபட்ட அபிப்பிராயம் இருக்க முடியாது. சமஷ்டித் தன்மை கொண்ட முழுமையான அதிகாரப் பகிர்வு என்பதை எல்லா அரசியல் கட்சிகளுமே ஏற்றுக்கொள்கின்றன. இன்றைய நிலையில் அரசியல் தீர்வு முயற்சி எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பதிலேயே கருத்து வேறுபாடு உண்டு.

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் நடைமுறைச் சாத்தியமான வழியைச் சிபார்சு செய்கின்றன. உடனடியாகச் சாத்தியமான தீர்வை ஏற்றுக் கொண்டு முழுமையான தீர்வுக்கான முயற்சியை முன்னெடுப்பதே அந்த வழி. இந்த நடைமுறை மக்களுக்கு உடனடி விமோசனத்தையும் காலப் போக்கில் முழுமையான அரசியல் தீர்வையும் பெற்றுத் தரக்கூடியது.

அரைகுறைத் தீர்வு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு முரணான நிலைப்பாட்டையே தொடர்ச்சியாக வெளிப்படுத்துகின்றது. அரைகுறைத் தீர்வை ஏற்க முடியாது என்பது அவர்களின் நிலைப்பாடு. உடனடியாகச் சாத்தியமான தீர்வையே அரைகுறைத் தீர்வு என்று அவர்கள் கூறுகின்றார்கள். அது அரைகுறைத் தீர்வு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அத்தீர்வை ஏற்பதால் தமிழ் மக்கள் எதையாவது இழக்கின்றார்களா என்பதும் எதையாவது புதிதாகப் பெறுகின்றார்களா என்பதுமே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. உதாரணமாக மாகாண சபையை எடுத்துப் பார்ப்போம்.

வடக்கு, கிழக்கு மாகாண சபை இப்போது பழங்கதை ஆகிவிட்டது. இரண்டு மாகாணங்களும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுக் கிழக்கு மாகாணத்தில் தனியான மாகாண சபை செயற்படுகின்றது. இதுதான் இன்றைய யதார்த்தம். இந்த நிலைமைக்குத் தமிழ்த் தலைமைகள் பிறரைக் குறை சொல்வதால் பலனில்லை. வடக்கு, கிழக்கு மாகாண சபை அம் மாகாணங்களிலுள்ள எல்லா இன மக்களினதும் நன்மதிப்பை பெறும் வகையில் தொடர்ந்து செயற்பட்டிருந்தால் பெரும்பாலும் இந்த நிலை தோன்றியிருக்காது.

முதலில் தெரிவு செய்யப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண சபை செயற்பட முடியாத நிலையை ஐக்கிய தேசியக் கட்சியும் புலிகளும் கூட்டுச் சேர்ந்து ஏற்படுத்தினார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்படுவதற்கான முதலாவது அத்திவாரம் அது எனக் கூறலாம். அந்த மாகாண சபையைச் செயற்படுத்த வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எந்தச் சந்தர்ப்பத்திலும் கோரிக்கை விடுக்கவில்லை.

மக்கள் மாகாண சபையை ஏற்பதால் அவர்கள் இப்போது அனுபவிக்கும் நன்மை மற்றும் உரிமைகளில் எதையும் இழக்கப் போவதில்லை. அதேநேரம் புதிய பல நன்மைகளை அவர்கள் பெறுவார்கள். மக்கள் எதையும் இழக்காமல் புதிய பல நன்மைகளைப் பெறக்கூடிய மாகாண சபைகளுக்குக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?

எதிர்ப்புக்கு இவர்கள் கூறும் பல காரணங்களுள் ஒன்று மாகாண சபை தமிழ் மக்களின் அபிலாஷையைப் பூர்த்தி செய்யவில்லை என்பதாகும். மாகாண சபை தமிழ் மக்களின் அபிலாஷையை முழுமையாகப் பூர்த்தி செய்கின்றது என்று எந்தவொரு தமிழ்க் கட்சியும் கூறவில்லை. மாகாண சபையை ஏற்றுக்கொண்டு முழுமையான தீர்வுக்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே இக்கட்சிகளின் நிலைப்பாடு.

இந்த இடத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மற்றைய தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான பிரதான முரண்பாடு தோன்றுகின்றது. கிடைக்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு முழுமையான தீர்வுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பது அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிலைப்பாடு. முழுமையான தீர்வன்றி வேறு எதையும் ஏற்க முடியாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலப்பாடு. இது நடைமுறையில் தோற்றுவிட்டது. இந்த நிலைப்பாட்டின் மூலம் தமிழ் மக்கள் உள்ளதையும் இழந்தார்களேயொழிய எதையும் பெறவில்லை. மக்களுக்கு இழப்பை ஏற்படுத்தாமல் தீர்வைப் பெறக் கூடிய வழிவகைகளே இன்றைய தேவை.

அரசாங்க ஆதரவு கட்சிகள்

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடன் இணக்க அடிப்படையில் செயற்படுவதற்கு எதிராகக் கூட்டமைப்பு கூறும் இன்னொரு காரணம் அரங்கத்தில் உள்ள கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுபவை என்பதாகும்.

அரங்கத்தில் உள்ள கட்சிகளுள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியே அரசாங்கத்தில் இருக்கின்றது. மற்றையவை சுதந்திரமாகச் செயற்படுகின்றன.

தமிழ் மக்களின் உரிமையைப் பெற வேண்டுமானால் அரசாங்கத்தை எதிர்த்தே தீர வேண்டுமா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அரசாங்கத்துடன் இணக்கமான நிலையில் செயற்பட்டு உரிமைகளைப் பெறுவதா அல்லது எதிர்நிலை எடுத்துச் செயற்படுவதா என்பது பற்றிய தீர்மானம் சமகால யதார்த்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் மூலம் ஆட்சி அமைக்கக் கூடிய நிலையில் இல்லை. அது ஒருபுறத்தில் உட்கட்சி நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது. மறுபுறத்தில் நாளுக்கு நாள் மக்களாதரவை இழந்து வருகின்றது. மேலும், இனப் பிரச்சினையின் தீர்வு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் நழுவல் போக்கையே பின்பற்றி வந்திருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவை வளர்த்துப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்பது வெறும் கற்பனை.

இனப் பிரச்சினையின் தீர்வுக்காக இடதுசாரிகள் உட்பட ஏனைய கட்சிகளுடன் பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் கூட்டாகச் செயற்படும் நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லை.

அரசாங்கத்துடனோ வேறு கட்சிகளுடனோ எவ்வித உறவும் இல்லாமல் தனித்து நின்று இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சாத்தியமானதல்ல. பதின்மூன்றாவது திருத்தமாக இருந்தாலென்ன அதனிலும் பார்க்கக் கூடுதலான தீர்வாக இருந்தாலென்ன அரசாங்கமே அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த நிலையில், அரசாங்கத்துடன் இணக்கமாகச் செயற்படும் கட்சிகளை விமர்சனம் செய்து கொண்டும் எதிர்ப்பு அரசியல் நடத்திக்கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைச் சாதி க்க முயற்சிக்கின்றது? எதையும் சாதிக்க முடியாது. அப்படியானால் எதற்காக இந்த நிலைப்பாட்டை எடுக்கின்றார்கள்?

தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கத்தின் தலையில் போட்டு அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்து எதிர்ப்பு அரசியல் செய்வதன் மூலம் இலகுவாக அம்மக்களின் வாக்குகளைப் பெற முடியும். இது வெகுஜன விருப்புவாத (பொப்யூலிஸ்ட்) அரசியல். இதன் மூலம் மக்களை உணர்ச்சிவசப்படுத்தலாம். ஆனால் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சாத்தியமில்லை. அறுபது வருடங்களாக இதே பாணியிலான அரசியலையே நம் தலைவர்கள் செய்து வருகின்றார்கள். இதுவரை மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை. இந்த அரசியலை இன்னும் நூறு வருடங்கள் செய்தாலும் மக்களுக்கு எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் தலைவர்கள் தங்கள் பாராளுமன்ற ஆசனங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.

காலத்துக்குக் காலம் சிலரைப் பாராளுமன்றத்துக்கு அனுப்புவது தான் தமிழ் மக்களின் அரசியலாகிவிடக்கூடாது. மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே அரசியலின் குறிக்கோள். அதற்கேற்ற விதத்தில் தலைவர்கள் மாற வேண்டும். மாறாவிட்டால் தலைவர்களை மாற்ற வேண்டும்.

நன்றி - தினகரன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’