வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தொடர் நடவடிக்கையினை அடுத்து யாழ். குருநகர் உயர்பாதுகாப்பு வலயம் அகற்றப்பட்டு வீதி திறக்கப்பட்டு மக்கள் மீளக்குடியேற்றப்பட்டனர்.

யாழ். நகர மத்தி குருநகர் பிரதேசத்தில் உள்ள ஜே 68 மற்றும் ஜே 69 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளான இதுவரை உயர்பாதுகாப்பு வலயமாக விளங்கிய றெக்கிளமேசன் கிழக்கு மற்றும் றெக்கிளமேசன் மேற்கு பகுதிகள் இன்றையதினம் பொதுமக்கள் மீளக்குடியமர விடுவிக்கப்பட்டன. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கடந்த 15 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக விளங்கிய இப்பிரதேசமானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள் காரணமாக பாதுகாப்பு தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு அதன் பிரதான வீதியான புதிய கடற்கரை வீதியும் பொதுமக்களின் பூரண பயன்பாட்டிற்காக இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. இன்றையதினம் முற்பகல் இப்பிரதேசத்தினை வந்தடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோரை யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க 51வது படையணி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜானக வெல்கம ஆகியோர் வரவேற்றனர்.

வரவேற்பினைத் தொடர்ந்து புதிய கடற்கரை வீதி என்ற பெயர்ப்பலகை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோரினால் திரைநீக்கம் செய்;து வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்ட அரங்கில் யாழ். பிரதேச செயலாளர் திருமதி எஸ்.தெய்வேந்திரம் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க 51வது படையணி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜானக வெல்கம ஆகியோருடன் மீளக்குடியமருவதற்காக வருகை தந்திருந்த பெருமளவு பொதுமக்களும் பங்குகொண்டனர்.

சுமார் 150 குடும்பங்கள் வசித்த மேற்படி பிரதேசத்தில் இன்றையதினம் முதற்கட்டமாக 94 குடும்பங்கள் மீளக்குடியமர வருகை தந்திருந்தனர். மீளக்குடியமரும் அனைவருக்கும் உடனடி நிதியுதவியாக ஐந்தாயிரம் ரூபாவும் வீடுகளை புனரமைக்க சீமெந்து பக்கற்றுக்களும் வழங்கப்படுவதுடன் உலருணவு நிவாரணமும் வழங்கப்படுவது முக்கிய விடயமாகும். இன்றைய நிகழ்வில் பங்குகொண்ட பிரதம அதிதிகள் மீளக்குடியமரும் மக்களுக்கு இரட்டை மண் அடுப்புக்களையும் அடையாள அன்பளிப்பாக வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் விசேட உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உயர் பாதுகாப்பு வலயங்களில் மீளக்குடியேற்றம் நடைபெறாது என்ற பொய்ப்பிரச்சாரங்களுக்கு இன்றைய நிகழ்வு ஓர் முற்றுப்புள்ளி எனத்தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சரவர்கள் ஜனாதிபதி அவர்களின் கொள்கைப்படி தென்னிலங்கை மக்கள் அனுபவிக்கும் அதே சுதந்திரம் வடபகுதி மக்களும் அனுபவிக்க உரிமை உண்டு. இம்மீளக்குடியேற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி மற்றும் யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க ஆகியோருக்கு பொதுமக்களின் சார்பில் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார். அத்துடன் யாழ். அரசாங்க அதிபர் மற்றும் யாழ். மாநகர முதல்வர் ஆகியோரும் இப்பிரதேச மக்களுக்கு தொடர் உதவிகளை வழங்கவுள்ளதையும் தெரியப்படுத்தினார்.

நிகழ்வின் இறுதியில் பிரதேச முக்கியஸ்தரும் சமாதான நீதவானுமாகிய கொன்ஸ்ரைன் மீளக்குடியமரும் பொதுமக்களின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’