வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

வடக்கில் இராணுவக் குடும்பங்களை குடியேற்றுவது நல்லிணக்கத்துக்கு உதவப்போவதில்லை:த.தே.கூட்டமைப்பு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில கிராமங்களில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்படாதுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
அதேவேளை, வடக்கில் பணியாற்றும் இராணுவத்தினரின் குடும்பங்களை வடக்கில் குடியமர்த்தி, அவர்களுக்கு விவசாயத்திற்கான காணிகளையும் வழங்கப்போவதாக வெளியான அறிவிப்பு வடக்கின் இன விகிதாசாரத்தையே மாற்றியமைக்கக்கூடியதாகும் எனவும் இது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவப்போவதில்லை எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு அண்மையில் விஜயம் செய்து இடம்பெயர்ந்த மக்களின் நிலைமையை நேரில் பார்வையிட்டதையடுத்து இது தொடர்பாக கொழும்பில் இன்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.
அதில் பேசும்போதே நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரனும் எம்.ஏ. சுமந்திரனும் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
"வடக்கில் சுமார் ஒரு லட்சம் இராணுவத்தினர் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களின் குடும்ப அங்கத்தவர்களையும் சேர்த்தால் சுமார் 4 லட்சம் பேர் இருப்பர். வடமாகாணத்தில் தமிழ் மக்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சமாக உள்ள நிலையில் இராணுவம் மற்றும் அவர்களின் குடும்பங்கள் சார்ந்த 4 லட்சம் பேரை குடியேற்றுவது வடக்கின் தற்போதைய இனவிகிதாசாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும்" என சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’