குடிவரவு தொடர்பான விவாதத்தின்போது தமிழ் அகதிகளின் கண்ணியம் தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டும் என வான்கூவர் பேராயர் ஜே. மைக்கல் மில்லர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில்,
இலங்கைத் தமிழ் அகதிகள் 492 பேரின் வருகை குறித்த கனடாவின் குடிவரவுக் கொள்கை தொடர்பாகவும் அண்மையில் கப்பலில் வந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகளை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் வலுவான கருத்தாடல்களைத் தோற்றுவித்துள்ளது.
தங்களின் தாய்நிலங்களில் தங்களுக்கு இழைக்கப்பட்ட பல இன்னல்களில் இருந்து தப்புவதற்காக எங்களின் கரைகளை வந்தடைந்துள்ள இவர்கள் தொடர்பாக சில கருத்துக்கள் ஏவிவிடப்படுகின்றன.
அவர்கள் உரிய காலம் வரை காத்திருக்கவில்லை எனவும் எங்களின் குடிவரவு வழிமுறைகளை பிழையான வழியில் பயன்படுத்துவதாகவும் மேலும் அகதிகளினால் கனடாவுக்கு பங்கம் ஏற்படாமல் தடுக்க வேண்டிய தேவை குறித்தும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய, குறிப்பாக இங்கு வந்துள்ளவர்களுக்குரிய, அடிப்படை கண்ணியத்தை மனதில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகிறது.
தனது தனிப்பட்ட வாழ்விலும் சபையிலும், இயேசுவானவர் தன்னை அகதிகளுடனும் வேறு ஒடுக்கப்பட்ட சமூகங்களுடனும் அடையாளப்படுத்திக்கொண்டார்.
இயேசுவின் வசனம்
"நான் ஓர் அந்நியனாக இருந்தேன். நீங்கள் என்னை வரவேற்றீர்கள்" (25:35) என்று அவர் கூறுகின்றார்.
கத்தோலிக்க சமூக கல்வி என்பது அகதிகளின் உரிமைகளில் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்களையும் மேற்கொண்டது கிடையாது. அத்தோடு, குடிவரவுக் கொள்கை, சட்ட வலுவாக்கல் மற்றும் மேம்பாடு என்பவை தொடர்பான விவாதங்களில் இங்கு வந்துள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பலிகடாக்கள் ஆகிவிடக் கூடாது.
பாதுகாப்பு கருதி, குடிவரவாளர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துதல் எந்த ஒரு பொறுப்பான அரசாங்கத்துக்கும் முக்கியமான விடயமாகும்.
இருப்பினும், ஆயுதந்தாங்கிய மோதல்கள், முறையற்ற பொருளாதார கொள்கைகள், இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் தங்கள் சொந்த நாட்டில் இடம்பெயர்ந்திருந்த மக்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டு பன்னாட்டு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் கத்தோலிக்க திருச்சபை உறுதியாக உள்ளது.
குடிவரவாளர்கள் மற்றும் அகதிகளின் தேசமாகவும், அநீதியில் இருந்து தப்பி வருவோரை வரவேற்பதிலும் நீண்ட வரலாற்றைக் கொண்டதாக கனேடிய தேசம் திகழ்கின்றது.
தொழிற்துறை மயமாக்கப்பட்ட நாடுகள் தேவைக்கதிகமாக கட்டுப்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் அகதிகள் தொடர்பான கொள்கைகளை வகுப்பதன் விளைவாக வேறு வழிகளில் ஆட்கள், குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் கடத்தப்பட்டு, கொண்டு வரப்படுவது உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது என்பது வெளிப்படை.
அதிவேகமாக வளர்ந்து வரும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் வரிசையில் முன்னணியில் ஆட்கடத்தல் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறைகூவல் விடுத்துள்ளது.
பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பரின்
பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் வளர்ச்சியடைந்த நாடுகளின் இந்த நிலை தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"குடிவரவு என்னும் கருத்தாடலுடன் இணைத்துப் பார்க்கப்படும் வசதியின்மையினால் அதிருப்தியடைந்த பொதுக்கருத்துக்களினால் ஏற்படும் அழுத்தத்தை மனதில் கொண்டு (இந்த நாடுகள்) தங்களின் எல்லைகளில் குடிவரவை அதிகளவில் மட்டுப்படுத்தியுள்ளன.
தங்களை வற்வேற்க மறுக்கும் ஒரு நாட்டினுள் எந்த வித உரிமைகளுமற்று, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தினரின் இரக்கமற்ற சுரண்டல்களுக்கு உட்படுத்தப்பட்டு சட்டத்துக்குப் புறம்பான சூழ்நிலைகளை இந்த ஆண்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் நிலை சமூகத்தில் ஏற்படுகின்றது."
இவ்வாறு பாப்பரசர் கூறியிருக்கின்றார்.
பொதுவான நலனைப் பூர்த்தி செய்யும் வகையில் குடிவரவுக் கொள்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டியதை ஒரு நாடு உறுதி செய்ய வேண்டியிருப்பினும், அத்தகைய கட்டுப்பாடுகள் சுயநலன்களையோ மட்டுப்படுத்தப்பட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டோ அமையக் கூடாது.
தங்களின் உயிரைக் காத்துக் கொள்வதற்காக தமது தாய்நாட்டில் இருந்து தப்பி வந்து தற்போது தடுப்பில் இருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை மனதில் நிறுத்தி இந்த நாட்டின் குடிவரவாளர் கொள்கையை ஆராய வேண்டியது நீதியானதாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’