வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

பெண் உடலில் புகுந்து பழிவாங்கிய மோகினி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை கிராமம். விடிந்தால் அமாவாசை. நள்ளிரவு 12 மணி. பேய்களும் உறங்கும் திகில் நேரம். ஆனால், ‘அதற்கு’ மட்டும் தூக்கம் வரவில்லை. ‘நாளுக்கு நாள் எல்லாம் மாறுகிறது.
13 வருசம் முன்ன வேலை பார்த்த ஸ்பின்னிங் மில் எப்படி இருக்கிறதோ’ என்று பார்க்க வேண்டும் போல இருந்தது. நினைத்த மாத்திரத்தில் ஆலை பகுதிக்கு வந்து சேர்ந்தது. நள்ளிரவாக இருந்தாலும் பரபரப்பாக இருந்தது மில். ஆண்களும் பெண்களுமாய் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். ஜன்னலோரம் இருந்தபடி உள்ளேயே பார்த்துக் கொண்டிருந்தது. தன்னுடன் வேலை பார்த்தவர்கள் யாராவது தென்படுகிறார்களா என்று ஜன்னல் வழியாக லேசாக எட்டிப் பார்த்தது. அப்போது, மில்லில் வேலை செய்யும் இளம்பெண் லட்சுமி அந்த பக்கமாக வந்து அங்கு கிடந்த கோன்களை அள்ளிக்கொண்டு நகர்ந்தாள். ஜன்னலை ஒட்டி உள் பக்கம் கிடந்த கோன்களை அவள் கவனிக்கவில்லை.
ஜன்னலோரம் நின்ற பேய்க்கோ பதற்றம். ‘அடடா, கோன்களை எடுக்காமல் போகிறாளே. சொல்வதா, வேண்டாமா?’ என்ற குழப்பம்.
‘இந்தாம்மா.. இங்கு ரெண்டு கோன் கிடக்கு பாரு’ ஆளில்லாத ஜன்னலோரத்தில் இருந்து அசரீரி போல குரல் வருவதை அறிந்து அதிர்ந்தாள் லட்சுமி. ‘நிசமாவே சத்தம் கேட்குதா, பிரமையா?’ என்ற சந்தேகத்தில் ஜன்னலை நெருங்கினாள். பிரமைதான் என்ற முடிவுக்கு வந்தவள் வெளியே எச்சில் துப்பிவிட்டு நகர்கிற நேரத்தில்.. அவலட்சணமான பெண் உருவம் அங்கு நிற்பதை உணர்ந்தாள். அவளது ‘வீ.....ல்’ அலறல் ஆலையையே உலுக்கியது. வேலையை அப்படியே போட்டுவிட்டு மொத்த ஊழியர்களும் அவளை சூழ்ந்தனர்.
‘‘ஜன்னல்ல பாருங்க. அவ நிக்கிறா. பாக்கவே பயமா இருக்கு. போகச் சொல்லுங்க’’ என்று திரும்பத் திரும்ப சொல்கிறாள்.
‘‘யாரும் இல்ல லட்சுமி. பாரு’’ & முகத்தில் தண்ணீர் தெளித்து தைரியம் கொடுத்து எழுப்புகின்றனர் சக ஊழியர்கள்.
கண் விழிக்கிறாள். ஆனாலும், பீதி அடங்கவில்லை. விழிகளை உருட்டி, சுற்றி நிற்பவர்களை பார்க்கிறாள். பயத்துடன் ஜன்னலையே வெறித்துப் பார்க்கிறாள். ஜன்னலை நோக்கி மீண்டும் கை காட்டுகிறாள். ‘‘எதையோ பாத்து அந்த பொண்ணு மிரண்டு போயிருக்கு. பூனை கீனை வந்திருக்கும். யாராச்சும் போய் பாருங்களேம்பா’’ என்கிறார் வயதான ஊழியர் ஒருவர். நள்ளிரவு என்பதால் ஆண்களும் சற்று தயங்கியே நிற்க, ஒரு சிலர் தைரியத்துடன் சென்றனர்.
அதற்குள், பக்கத்து குடிசையில் இருந்து விபூதி மந்திரிப்பவரை அழைத்து வந்தனர் சிலர். வேப்பிலையும் கையுமாக வந்தார். ‘‘ஏய்... யாரு நீ? உண்மையை சொல்லு’’ என்று லட்சுமியின் முகத்தில் வேப்பிலையை அடித்தார். விபூதியையும் அள்ளி வீசினார். ஏற்கனவே பயத்தில் இருந்த லட்சுமியின் முகத்தில் விபூதியும் கொட்டியதில் விகாரமாகியிருந்தாள். பூசாரியை நோக்கி கையை நீட்டினாள். ‘‘நிறுத்துறா’’ சாந்தமான பெண் லட்சுமி அப்படி கத்தியதில், அத்தனை பேருக்கும் அதிர்ச்சி.
வேறு யாரோ குரல் போல இருந்தது. குரல் தொடர்ந்தது... ‘‘பேரு ப்ரியா. 13 வருசம் முன்னாடி இதே மில்லுலதான் வேலை செஞ்சேன். குடும்ப தகராறு. தூக்கு மாட்டி செத்துட்டேன். வேலை செஞ்ச இடத்த பாக்கணும்போல இருந்திச்சு. அதான் வந்தேன். ஜன்னலோரமா நின்னு மில்லுல வேலை நடக்கிறத பார்த்தேன்’’ அதுவரை அமைதியாக இருந்த குரலில் திடீர் ஆவேசம். ‘‘நான் ஜன்னல்கிட்ட இருக்கிறதுகூட தெரியாம இந்த பொண்ணு என் மூஞ்சியில துப்பிட்டா. நான் யாருனு காட்டினேன்’’ லட்சுமியின் குரலில் ப்ரியா பேசப் பேச, பூசாரி உள்பட எல்லோரது முகமும் வியர்த்துப் போயிருந்தது.
குரலில் இருந்த ஆவேசம் மீண்டும் குறைந்தது. ‘‘வந்த ஆசை நிறைவேறிடிச்சு. மில்ல பாத்துட்டேன். உங்களை எல்லாம் பார்த்ததுல 13 வருசம் முன்ன நான் வேலை பார்த்ததெல்லாம் ஞாபகம் வந்துச்சு. உள்ள இரும்பு கம்பிகள் இருக்கு. அந்த பக்கம் போக பயமா இருக்கு. வெளியே போக வழி காட்டுங்க’’ பாவமாய் அந்த குரல் பேச, அதிர்ச்சி கலந்த சோகத்தில் நின்றிருந்தனர் ஊழியர்கள். ‘‘வாசல்கேட்டுக்கு லட்சுமிய கூட்டிப் போங்கம்மா’’ என்றார் பூசாரி.
அங்கு போனதும் மீண்டும் வேப்பிலையை அவள் மீது தடவினார். ‘‘அப்பாவி பொண்ண ஒண்ணும் பண்ணிடாம சமத்தா போய்டும்மா’’ என்றார்.
அலறியபடி விழுந்தாள் லட்சுமி. ‘பேய் போய்டிச்சு’ என்று சந்தோஷ தகவல் சொன்னார் பூசாரி. சிறிது நேரத்துக்கு பிறகு எழுந்த லட்சுமிக்கு விபூதி பூசிவிட்டார். தனக்கு என்ன ஆயிற்று, என்ன பேசினோம் என்ற விவரம் அதற்கு பிறகும் லட்சுமிக்கு நினைவில்லை. நடந்த சம்பவங்களை சக ஊழியர்கள் விளக்கிச் சொன்னதை ஆச்சரியமாக அதிர்ச்சியுடன் கேட்டாள். அதன் பின்னர் அவளுக்கு பயங்கர உடல் வலி. 2 நாள் விடுமுறைக்கு பிறகு வழக்கம்போல மில்லுக்கு வர ஆரம்பித்தாள். அவள் மட்டுமல்ல மில் ஊழியர்கள் யாரும் அதற்கு அப்புறம் ஜன்னல் பக்கம் போவதே இல்லை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’