யாழ்ப்பாண பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இன்று (20) இடம்பெற்றது புகைப்படம் இணைப்பு.
.யாழ். சுண்டிற்குளியில் அமைந்துள்ள யாழ். பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை இடம்பெற்ற இவ்வொருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமை தாங்கினார். இச்சமயம் யாழ்.பிரதேச செயலாளர் திருமதி தெய்வேந்திரம் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ். உதவிப் பிரதேச செயலாளர் யாழ். மாநகர பிரதி முதல்வர் சகல திணைக்களங்கள் சபைகள் மற்றும் அதிகாரசபைகள் ஆகியவற்றின் தலைவர்கள் அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் கடற்றொழிலாளர் சங்கங்கள் சனசமூக நிலையங்கள் விளையாட்டுக்கழகங்கள் மாதர் மற்றும் இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பெருந்தொகையானோர் இக்கூட்டத்தில் பங்குகொண்டனர்.
யாழ். பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கடற்றொழில் கால்நடை வளர்ப்பு வீட்டுத்தோட்டம் மற்றும் பயிர்வளர்ப்பு உள்ளிட்ட விவசாயத்துறை பொதுச்சுகாதாரம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை குடிநீர் வசதிகளும் விநியோகமும் வீதி அபிவிருத்தி மின்சார விநியோகம் வீடமைப்புப்திட்டங்கள் மற்றும் பொதுவசதிகள் உள்ளிட்ட விடயங்கள் தனித்தனியாக ஆராயப்பட்டு அபிப்பிராயங்கள் பெறப்பட்டு அந்தந்த துறைசார் அதிகாரிகளின் விளக்கங்களும் பெறப்பட்டன. குறிப்பாக யாழ். பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெருமளவு கரையோரப் பகுதி மக்களின் வாழ்வாதார தொழிலாக காணப்படும் கடற்றொழில் குறித்தும் ரோலர் பாவனை சிறுகடற்றொழில் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகள் குறித்தும் நீண்டநேரம் விரிவாகவும் விளக்கமாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஏனைய துறைகள் குறித்தும் அதன் மேம்பாட்டு நடவடிக்கைகள் பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் தனித்தனியாக ஆராயப்பட்டன.
இக்கூட்டத்தில் முக்கிய உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அடுத்த மூன்று மாத காலத்திற்குள் சுத்தமான யாழ்.நகர் என்ற இலக்கோடு செயற்பட அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்புவிடுத்தார். இந்நோக்கை அடைவதற்காக அனைத்து துறையினரும் பொதுமக்களின் பங்களிப்போடு இணைந்து செயற்படவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இன்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் தொடர்ச்சியை பிறிதொரு தினத்தில் நடத்துவதெனவும் அதில் மீதமாகவுள்ள ஏனைய துறைசார் விடயங்களை தனித்தனியாக ஆராய்ந்து மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதெனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’