கி கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கண்ணகி நகர் மக்களை இன்று (21) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினார் புகைப்படம் இணைப்பு.
கண்ணகி நகர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தலைமையில் கண்ணகிநகர் அம்பிகை வித்தியாலயத்தில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
கண்ணகிநகர் பிரதேச மக்களுக்கு கிராம அலுவலக பிரிவு தனியாக வேண்டுமென்றும் அங்கே அமைந்திருக்கும் பாடசாலையை நிரந்தரப் பாடசாலையாக பதிவு செய்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமது கிராமத்திற்கு மின்சார வசதிகள் செய்து தரப்பட வேண்டுமெனவும் தனியான உப தபாலகம் ஒன்று இயங்குவதற்கு ஆவன செய்யும் படியும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
1410 குடும்பங்களுக்கு தனியொரு கிராம அலுவலராக புன்னை நீராவி பிரதேசத்தின் கிராம அலுவலரே கடமையாற்றுவதாகக் குறிப்பிட்ட கண்ணகி நகர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் இவ்வளவு எண்ணிக்கையான குடும்பங்களுக்கு தனியொரு உத்தியோகத்தினரால் ஒருபோதுமே நிறைவான சேவையைச் செய்ய முடியாது என்பதையும் சுட்டிக் காட்டினார்.
அத்துடன் கண்ணகிநகர் மீனவர் சங்கத்தின் தலைவர் உரையாற்றும் போது தாம் கடற்றொழிலில் தொடர்ந்தும் ஈடுபடுவதற்குத் தடையாக இருக்கின்ற காரணிகளை நீக்கி தமது தொழில் நடவடிக்கைகளுக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டனர்.
மேலும் கடற்றொழிலாளர்களுக்கான வலை படகு கடனுதவி போன்றவற்றை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, ஆனையிறவு தட்டுவன்கொட்டிப் பகுதியிலுள்ள பரவைக் குளத்தை கட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் இக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் தமது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து பாடசாலைக்கு 7 இலட்சம் ரூபாவை வழங்குவதாகவும் கண்ணகி நகர் விளையாட்டுக் கழகத்திற்கு 50 ஆயிரம் ரூபாவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் அங்குள்ள பாடசாலையை நிரந்தரமாக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகவும் தனியான கிராம அலுவலர் பிரிவு குறித்துப் பரிசீலிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கட்டுவன்கொட்டியில் உள்ள பரவைக் குளத்தின் கட்டுமான வேலைகளுக்கு ஏற்கனவே சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும் கண்ணகி நகர் பகுதிக்கான தனியான உப அஞ்சல் அலுவலகம் தொடர்பாக தபால் திணைக்களத்துடன் ஆலோசிப்பதாகவும் தெரிவித்தார்.
மக்களின் வீட்டுவசதி தொழில் வாய்ப்புகள் சிறுவர்களின் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தமது கரிசனையை அங்கே வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து கல்லாறுப் பகுதி மக்களைச் சந்தித்த சந்திரகுமார் அவர்கள் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டார்.
கல்லாற்றுப் பிரதேசத்தில் சேதமடைந்த வீடுகளைத் திருத்துதல் குடிநீர்ப் பிரச்சினை மற்றும் ஆழ் கடல் மீன்பிடிக்கான அனுமதி ஆகியவற்றைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இப்பிரச்சினைகள் தொடர்பாக அடுத்த சில வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சந்திரகுமார் அவர்கள் மக்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’